கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், 36,312 மனுக்கள் பெறப்பட்டு தகுதிவாய்ந்த 24,099 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்திடவும், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”, “கள ஆய்வில் முதலமைச்சர்” போன்ற திட்டங்களையும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான விடியல் பயணத் திட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 போன்ற முன்னோடி திட்டங்களையும் இவ்வரசு தனது மக்களுக்கு பொறுப்புணர்வுடன் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஏராளமான அரசு சேவைகள் அரசு அலுவலகங்களை நாடிச்சென்று பெறுவதை தவிர்த்து அவர்களின் இல்லத்திலிருந்தே இணைய வழி மூலமாகவே விண்ணப்பிக்கும் வகையில் பல்வேறு சேவைகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
விளிம்பு நிலை மக்கள் மற்றும் விழிப்புணர்வு இல்லாத மக்கள் சேவைகளுக்கான
இணைக்கப்பட வேண்டிய சான்றாவணங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத
நிலையில் உள்ளோருக்கு உதவிடும் வகையிலும், அரசு சேவைகளை எளிதாக்கி அவர்களின்
இருப்பிடத்திற்கே எடுத்துச் சென்று குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கிடும் வகையில்,
“மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் கோயம்புத்தூரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 18.12.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
“மக்களுடன் முதல்வர்” என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக
வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,
கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்கள்.
நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் 18.12.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகள் மற்றும் 9
பெரிஅர்பன் பஞ்சாயத்துகள் ஆகிய இடங்களில் 18.12.2023 முதல் 29.12.2023 வரை நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட 7,796 மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளால் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு 5,647 தகுதியான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, நகர்ப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பினையடுத்து, இரண்டாவது கட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை 11.07.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கிருஷ்ணகிரி, பர்கூர், தளி, ஊத்தங்கரை, சூளகிரி, காவேரிப்பட்டிணம், கெலமங்கலம், ஓசூர், வேப்பனஹள்ளி, மத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 11.07.2024 முதல் 30.08.2024 வரை நடைபெற்ற 96 முகாம்கள் மூலம் 28,517 மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளால் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு 18,442 தகுதியான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி வட்டத்தில் பெறப்பட்ட 12659 மனுக்களில் 7651 மனுக்கள், பர்கூர் வட்டத்தில் பெறப்பட்ட 2273 மனுக்களில் 1803 மனுக்கள், ஊத்தங்கரை வட்டத்தில் பெறப்பட்ட 4854 மனுக்களில் 3075 மனுக்கள், போச்சம்பள்ளி வட்டத்தில் பெறப்பட்ட 4238 மனுக்களில் 2887 மனுக்கள், ஓசூர் வட்டத்தில் பெறப்பட்ட 4197 மனுக்களில் 2985 மனுக்கள், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் பெறப்பட்ட 4647 மனுக்களில் 3393 மனுக்கள், சூளகிரி வட்டத்தில் பெறப்பட்ட 2451 மனுக்களில் 1493
மனுக்கள், அஞ்செட்டி வட்டத்தில் பெறப்பட்ட 993 மனுக்களில் 812 மனுக்கள் என மொத்தம் 36,312 மனுக்கள் பெறப்பட்டு தகுதிவாய்ந்த 24,099 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், பயனடைந்த மாற்றுத்திறனாளி அனிதா க/பெ. ரவிசந்திரன் (செல்: 8940454171) “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது:
நான் எனது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன், காவேரிப்பட்டிணம் 1- வது வார்டில் வசித்து வருகிறோம். எனது கணவர் டைலரிங் தொழில் செய்து வருகிறார். நான் காவேரிப்பட்டிணத்தில் உள்ள நகை கடையில் வேலைபார்த்து வருகிறேன். மாற்றுத்திறனாளியான நான் வேலைக்குச் செல்லும் போது எனது கணவர் தான் தினந்தோறும் என்னை அழைத்து செல்வார். இந்நிலையில் காவேரிப்பட்டிணத்தில் 14.12.2024 அன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் எனக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மனு (மனு எண்:கே.ஜி.ஐ/14.12.2023 – 9225562) அளித்தேன். இந்நிலையில் கடந்த 16.12.2024 (திங்கள் கிழமை) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாளன்று ரூ.1 இலட்சத்து 01 ஆயிரத்து 800 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கினார். இந்த ஸ்கூட்டர் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இனி நான் இந்த வாகனம் மூலம் வேலைக்குச் செல்வேன். எங்களைப் போன்ற நடுத்தர குடும்பத்தினர் இதுபோன்று ரூ.1 இலட்சம் செலுத்தி ஸ்கூட்டர் வாங்குவது என்பது இயலாத காரியமாக உள்ளது. அதேப்போல் என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி கோரிக்கை மனுக்கள் வழங்க எங்கள் ஊரிலேயே மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடத்தி, இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டர் வழங்கியது எனக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளது. “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமை செயல்படுத்த உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், பயனடைந்த மாற்றுத்திறனாளி சென்னம்மாள் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது:
நான் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கே.எட்டிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். பெண் மாற்றுத்திறனாளியான நான் தினந்தோறும் எட்டிப்பட்டி கிராமத்தில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள குன்னத்துாரில் உள்ள தனியார் உர விற்பனை கடையில் கணக்கு எழுதும் வேலை பார்த்து வருகிறேன். மேலும் தினசரி பேருந்தில் பயணம் செய்வது கடினமாக இருந்தது. இந்நிலையில் ஊத்தங்கரையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டர் வேண்டி மனு அளித்தேன். அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு எனக்கு கடந்த 21.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆகியோர் ரூ. 1 இலட்சத்து 01 ஆயிரத்து 800 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருந்திய வாகனம் வழங்கினார்கள். குறைந்த சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தும் நான் இவ்வளவு பெரிய தொகை கொண்டு ஸ்கூட்டர் வாங்குவது இயலாத காரியம். மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது நிறைந்த மனத்துடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு
சு.மோகன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கிருஷ்ணகிரி மாவட்டம்.