தருமபுரி மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். கூட்டுறவுத்துறை சார்பில் மக்களுக்கு பொது மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர் சார்பில்
10 முதல்வர் மருந்தகங்களும், கூட்டுறவுத்துறை சார்பில் 11 முதல்வர் மருந்தகங்களும் ஆக மொத்தம் 21 மருந்தகங்களை
காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதையொட்டி தருமபுரி குமாரசாமிபேட்டையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தில் பொதுமக்களுக்கு மருந்துகள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது .இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். தரும நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜிகே மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மூலம் தொடங்கப்படும் 10 முதல்வர் மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களால் தொடங்கப்படும் 11 முதல்வர் மருந்தகங்கள் ஆக மொத்தம் 21 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்கும் துணை முனைவோருக்கு அரசு மானியம் ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது.
இதில் 50 சதவீத தொகை ரூ. 1.5 லட்சம் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரொக்கமாகவும் ,50 சதவீத தொகை மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் முதல்வர் மருந்தகங்களுக்கு மானியம் ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சர்ஜிக்கல்ஸ், நியூட்ரா சூட்டிக் கல்ஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் மற்றும் அனைத்து விதமான மருந்துகளும் 25% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், நகராட்சித் தலைவர் லட்சுமி மற்றும் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.