களியக்காவிளை, டிச- 16
களியக்காவிளையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் செங்கவிளை என்ற பகுதி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மாலையில் சாலை ஓரத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக சிந்து (33) என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். இதற்கு இடையே எதிரில் இருந்து வேகமாக மற்றொரு கார் வந்தது. அந்த கார் திடீரென்று வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி இருந்த கார் மீது மோதி தள்ளியது.
இதில் அதிர்ஷ்டவசமாக நடந்து சென்ற சிந்து உயிர் தப்பினார். ஆனால் மோதிய வேகத்தில் அந்த கார் இரண்டு முறை கவிழ்ந்து சாலையிலேயே கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்தில் விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்த காரில் உள்ள டிரைவரை மீட்க முயன்றனர்.
ஆனால் இதற்கு இடையில் அந்த காரில் இருந்து டிரைவர் திடீரென துள்ளி குதித்து ஓடி தப்பி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகிறார்கள். இதற்கிடையில் இந்த விபத்து நடந்த போது, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.