வேலூர், ஜூன் 10-
வேலூர் மாவட்டம்,
பள்ளிகொண்டா அருகேயுள்ள கந்தனேரியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஆனந்த் என்ற மகனும், ஆனந்தி, திரிஷா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில்
ஆனந்திக்கு திருமணம் ஆகி காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை கோட்டை நத்தம் பகுதியில் வசித்து வருகிறார். திரிஷா சற்று வாய் பேச முடியாதவர். இதற்கிடையில் ராமுவுக்கும், ராதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால் ராமு ஆத்திரத்தில் ராதாவை அவ்வப்போது கடுமையாக தாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். அத்துடன் மனைவி ராதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராமு குடிபோதையில் வந்து ரகளை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தந்தை ராமுவின் போக்கு பிடிக்காத மகன் ஆனந்த் தனது தாய் ராதாவை காட்பாடி அருகே உள்ள கோட்டநத்தம் பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அனுப்பி அங்கேயே இருக்கும்படி கூறியுள்ளார். இந்நிலையில் தனது தாய் வீட்டில் தங்கி அங்கிருந்தபடியே ராதா பல்வேறு இடங்களில் விவசாய கூலி வேலைகளைச் செய்து வந்தார். இந்நிலையில் ராமுவும், ராதாவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் பகுதியில் சேட்டு மற்றும் ராதிகாவுக்குச் சொந்தமான நிலத்தில் வேலை செய்துவிட்டு புதியதாக கட்டப்பட்டுள்ள சேட்டு -ராதிகாவின் வீட்டுக்கு வெளியே தங்கிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த (08:06:2024) அன்று இரவு சுமார் 8:30 மணி அளவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராமு போதை தலைக்கேறியதால் மனைவி ராதாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த ராதாவிடம் வாய்த் தகராறு செய்தார் ராமு. இதில் தகராறு முற்றி அங்கிருந்த ரீப்பர் கட்டையால் ராதாவின் தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதில் ராதா ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ராதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் அங்கிருந்து ராமு தப்பியோடி விட்டார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது ராதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், தலைமையில் காட்பாடி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) அன்பரசி, லத்தேரி காவல் ஆய்வாளர் ந.சுரேஷ்பாபு, உதவி ஆய்வாளர்கள் கார்த்திக், மணிகண்டன், ராமமூர்த்தி, பாலவெங்கட்ராமன், பழனி, மனோகரன், பயிற்சி உதவி ஆய்வாளர் பரத், மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கே அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்த ராதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைந்தனர். இந்நிலையில் தப்பியோடிய ராமுவை தேடி வந்த நிலையில் பள்ளிக்கோண்டா அடுத்த வெட்டுவானம் மாரியம்மன் கோயில் அருகில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை காவல் துறையினர் விரைந்து சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர் காட்பாடி காவல் ஆய்வாளர் அன்பரசி கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.