நாகர்கோவில் ஜூலை 19
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனங்களில் சில வாலிபர்கள் சாகசம் செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அப்பகுதி வழியாக வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த வண்ணம் வேகமாக வந்த இருவரை கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். அப்போது இளைஞர்களில் ஒருவர் இன்று எனது பிறந்தநாள் எனவே சந்தோசத்தில் வீலிங் செய்து தவறு செய்து விட்டேன் என தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு தன்னை மன்னித்து விட்டுவிட வேண்டும், அபராதம் எதுவும் விதித்து விட வேண்டாம் பிறந்தநாள் அதுவுமாக காவல்துறை என்னை தண்டிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று அமர வைத்து அந்த இரு இளைஞர்களின் பெற்றோர்களை காவல் நிலையம் வரச் சொல்லி அழைக்கப்பட்டனர். மேலும்அந்த இளைஞர்கள் செய்த தவறை ஒப்புக் கொண்டதாலும், இன்று ஒருவருக்கு பிறந்தநாள் என்பதாலும், இனி இந்த இளைஞர்கள் எந்த காலத்திலும் தவறு செய்யக் கூடாது என்பதை உணர்த்துவதற்காகவும். இவர்கள் போன்ற இளைஞர்கள் தவறு செய்யக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகவும் காவல் நிலையம் வந்த பெற்றோர் முன்னிலையிலும் காவல் நிலைய போலீசார் முன்னிலையிலும் காவல் நிலையத்தில் வைத்து அந்த இளைஞர்களைக் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டச் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து இன்ப அதிர்ச்சி அளித்தார். மேலும் இளைஞர்கள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு சாலை பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்கூறி பிறந்தநாள் பரிசாக அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்கிய இளைஞர்களில் ஒருவருக்கு பிறந்தநாள் என்றவுடன் காவல் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி அறிவுரை வழங்கி அனுப்பிய காவல் ஆய்வாளரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.