நாகர்கோவில் ஜூன் 22
வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும் தாம்பரம் – நாகர்கோவில் அதி விரைவு ரயிலினை கன்னியாகுமரி வரை நீட்டித்து நாள் தோறும் இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய ரயில்வே துறை அமைச்சர், புது டெல்லி ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் சென்னை தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தளவாய்சுந்தரம் எம் எல் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு நாள்தோறும் பொதுமக்கள் தங்களின் அவசர மற்றும் அவசிய தேவைகளுக்காக சென்று வருகிறார்கள். தற்போது தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு இரவு ரயில் எண்: 22657 / 22658 வாரத்திற்கு 3 நாட்கள் சென்று வருகிறது. இந்த ரயிலினை குமரி மாவட்ட மக்களின் வசதிக்காக தினசரி ரயிலாக மாற்றி கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டுமென்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கும், இவைகுறித்து 2024 ஜுலை 1-ம் தேதி வெளியிடப்படும் ரயில்வே கால அட்டவணையில் சேர்ப்பதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர், புது டெல்லி ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹைதரபாத் – தாம்பரம் இடையே தினசரி அதிவேக விரைவு ரயில் (சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில்) எண்: 12759 / 12760 இயக்கப்படுகிறது. இந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலினை தாம்பரம், செங்கல்பட்டு, அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பதற்கும், இவை குறித்து 2024 ஜுலை 1-ம் தேதி வெளியிடப்படும் ரயில்வே கால அட்டவணையில் சேர்ப்பதற்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர், புது டெல்லி ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்களுர் சென்ரலிலிருந்து திருவனந்தபுரம் சென்ரல் வரை இரவு நேர விரைவு ரயில் எண்: 16347 / 16348 இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நெய்யாற்றின்கரை, பாறசாலை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் ஆகிய இடங்களில் நின்று கன்னியாகுமரி செல்ல வேண்டும். பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இந்த ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இவை குறித்து 2024 ஜுலை 1-ம் தேதி வெளியிடப்படும் ரயில்வே கால அட்டவணையில் சேர்ப்பதற்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர், புது டெல்லி ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கும், புது டெல்லி ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் ஜெயவர்மா சின்கா மற்றும் சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் தளவாய்சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார்.