நாகர்கோவில் அக் 20
கன்னியாகுமரி – சென்னை விரைவு ரயில் பெட்டிகளில் சுத்தம் செய்ய கூடுதல் பணியாளர்களை நியமிக்க தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ எழுதிய கடிதத்திற்கு ரயில் பெட்டிகளில் அவப்போது சுத்தம் செய்வதற்கு ஏதுவாக 6 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால் கன்னியாகுமரி விரைவு ரயிலை பெரிதும் விரும்பி பயணித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி விரைவு ரயில் எண் 12634 கன்னியாகுமரியிலிருந்து நாள்தோறும் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வழியாக சென்னைக்கு மறுநாள் காலை 6.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக ரயில் எண் 12633 சென்னையிலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.55 மணிக்கு நாகர்கோவில் வருகிறது. காலை 5.35 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகிறது.
இந்நிலையில் இந்த ரயிலினை, வண்டி எண்: 16525 கன்னியாகுமரி – பெங்களுர் விரைவு ரயில் / ஐலேன்ட் விரைவு ரயிலாக மாற்றி கன்னியாகுமரியிலிருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு பெங்களுருக்கு ரயில் ரேக் பகிர்வு அடிப்படையில் தற்போது சென்று வருகிறது. இதைப்போன்று மறுமார்க்கத்தில் இந்த ரயில் வண்டி எண்: 16526-ன் கீழ் பெங்களுரிலிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.50 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்தடைகிறது. சில நேரங்களில் இந்த ரயில் காலதாமதமாகவும் வந்து சேர்கிறது. இந்த ரயிலினை சுத்தம் செய்வதற்கு போதுமான நேரம் இல்லாததால் அவசர கோலத்தில் எந்தவித தூய்மை பணியும் மேற்கொள்ளாமல், இருக்கைகள், படுக்கைகள் சுத்தம் செய்யபடாமல் மீண்டும் வண்டி எண் 12634-ன் கீழ் கன்னியாகுமரி விரைவு ரயிலாக மாற்றப்பட்டு சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது. சாதரணமாக கன்னியாகுமரி விரைவு ரயில் காலை 5.35 மணிக்கு சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்தடைகிறது. பிறகு மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்லும். இதனால் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்கும், பராமரிப்பதற்கும் போதுமான நேரம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது கன்னியாகுமரிக்கு வருகை தரும் கன்னியாகுமரி விரைவு ரயிலினை உடனடியாக பெங்களுருக்கு இயக்குவதால் ரயில் பெட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படாமலும், பராமரிக்கப்படாமலும் இருக்கின்ற நிலை படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைக்கு டிக்கெட் எடுத்தும் ஆரோக்கியமான முறையில் பயணிப்பதற்கு உரிய வசதிகள் ரயில் பெட்டிகளில் செய்யப்படவில்லை.
இது தொடர்பாக ரயில் பெட்டிகளில் அவப்போது சுத்தம் செய்வதற்கு ஏதுவாக பணியாளர்களை நியமித்து, தூய்மைப் பணிகள் தடை படாமல் நடைபெறவும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மையமாக கொண்டு இப்பணிகளில ரயில்வே நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு தளவாய்சுந்தரம் 23-05-2024 அன்று கடிதம் எழுதினார். இதன் பயனாக ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து 12634 எண் கொண்ட கன்னியாகுமரி விரைவு ரயிலில் தூய்மை பணி சிறப்புற மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இதில் எவ்வித குறைபாடுகளும் வராமல் இருக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ரயில்வே வாரியம் பராமரிப்பு சேவைகளை 18-07-2024 முதல் பெங்களுர் – கன்னியாகுமரி – சென்னை ரயில் மற்றும் மறுமார்க்கத்திலும் இதனை செயல்படுத்தியுள்ளது என்றும் இதற்காக 6 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், இவர்கள் விரைவு ரயில் செல்லும் போது ரயில் பெட்டிகளில் அவப்போது தூய்மை பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் இது தொடர்பாக தூய்மை பணிகளை ரயிலில் மேற்கொள்ள பெங்களுர் கோட்டத்திற்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தூய்மை பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை பெங்களுரிலிருந்து கன்னியாகுமரிக்கு புறப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ளவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் மனிஷ் தப்லால் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
உரிய நடவடிக்கை எடுத்த திருவனந்தபுரம் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு தளவாய்சுந்தரம் நன்றி தெரிவித்துள்ளார்.