நாகர்கோவில் மே 30
தடிக்காரன்கோணம் ஜங்சன் முதல் வாழையத்து வயல் வரையிலான சாலைப் பணிகளுக்குரிய டெண்டர் தொடர்பாக அரசு மீது தி.மு.க குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தற்போது அவர் வழக்கை வாபஸ் பெற்றதால் நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதனடிப்படையில் இதற்குரிய சாலைப் பணிகளை தேர்தல் விதி முறைகள் நிறைவடைந்ததும் இதற்கான டெண்டர் விட்டு பணிகளை உடனடியாக தொடங்கி தரமான முறையில் பணிகளை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வனப்பகுதிகள் நிறைந்த தடிக்காரன்கோணம் ஜங்சன் முதல் வாழையத்து வயல் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இப்பகுதிகளில் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு 2021-ம் ஆண்டில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ரூ. 2 கோடியே 85 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் காரணமாக நிதி நிலுவையில் இருந்தது. மீண்டும் 2023-ல் பணிகளை தொடங்குவதற்கு டெண்டர் விடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் டெண்டர் தொடர்பாக தி.மு.க குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் மதுரை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் வழக்கு தொடர்ந்த கேட்சனிடம் சமரசம் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டதால் அரசுக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை அவர் வாபஸ் பெற்றார். இதனைத் தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றம் தற்போது இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
முக்கிய சாலையான தடிக்காரகோணத்தில் இருந்து கீரிப்பாறை சாலை வழியாக காமராஜபுரம், கொத்தன்பள்ளம் வாழையத்துவயல், பால்குளம் கீரிப்பாறை போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்பு பொதுமக்கள் மற்றும் ரப்பர் தொழிற்சாலைக்கு செல்கின்ற தொழிலாளர்கள், எஸ்டேட்டுகளுக்கு செல்லுகின்ற தொழிலாளர்கள் மற்றும் வாகனங்கள் மூலம் செல்கின்றவர்களும் பழுதடைந்துள்ள மோசமான இச்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய நேரங்களில் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் இச்சாலை வழியாக செல்வதற்கு மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையினை சரி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும் சாலையினை சரி செய்வதற்கு காலம் தாழ்த்தி வருவது மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதாக உள்ளது. வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட சாலையினை சீரமைக்க வனத்துறை ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ள நிலையில் காலம் தாழ்த்தாமல், டெண்டர் விட்டு குறித்த காலத்திற்குள் இச்சாலைப்பணிகளை நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தற்போது துவச்சி அருகே நடைபெற்று வரும் தோவாளை சானலை சீரமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அப்போது தான் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை ஜுன் 1-ம் தேதி திறக்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் சம்மந்தப்பட்ட துறை நிறைவேற்றி பேச்சிப்பாறை அணை தண்ணீர் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.