தக்கலை, பிப்- 29
குமரி மாவட்டம் தக்கலை முத்தரக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (38). இவர் தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் பஸ்சுக்காக அழகிய மண்டபம் சந்திப்பில் காத்திருந்தார். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் அரசு பஸ் வந்தது. அந்த பஸ்ஸில் ஜெயக்குமார் ஏற முயன்ற போது, அதற்குள் பஸ்சை டிரைவர் எடுத்து விட்டார் என கூறப்படுகிறது.
இதனால் ஜெயக்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விட்டு .நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் ஜெயக்குமார் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரி சரஸ்வதி என்பவர் தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.