நித்திரவிளை , டிச- 6
நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளுக்கு டாரஸ் லாரிகளில் கேரளா பகுதிகளில் இருந்து செம்மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் நித்திரவிளை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கணபதியான் கடவு பாலம் வழியாக நித்திரவிளை நோக்கி வந்த டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது, கேரளாவில் பாறசாலை அருகே இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் எடுக்கப்படும் கிராவல் மண்ணை குமரி நாற்கரை சாலை பணிக்கு கொண்டு போவதாக அனுமதி சீட்டு வாங்கி அந்த மண்ணை நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வருவதாக தெரிய வந்தது.
பின்னர் லாரியை காவல் நிலையம் கொண்டு வந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஒட்டி வந்த புதுக்கடை அருகே இலவு விளை பகுதியை சேர்ந்த அபினேஷ் (25) மற்றும் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அபினேஷை கைது செய்தனர்.