தருமபுரி மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரி இந்திய மருத்துவ சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல், பொருளாளர் சுகம், இளைஞரணி மாவட்ட தலைவர் விஜயகாந்த் ,மாவட்ட நிர்வாகி கோபி, ஒன்றிய தலைவர்கள் செல்வம், சுரேந்தர் , குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட ரங்கில் மாவட்ட கட்சி தலைவர் தாபா சிவா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது சென்னையில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது தலைவரிடம் நான் ஒரு கோரிக்கையை வைத்தேன். தருமபுரி மாவட்டம் அதியமான் வாழ்ந்த பூமி அதியமான் அரசன் நீடுழி வாழ நெல்லிக்கனியை கொடுத்த அவ்வையார் வாழ்ந்த பூமி என்று கூறினேன். இந்த மாவட்டம் வளர்ச்சி குறைந்த பின் தங்கிய மாவட்டம் எனவே 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தருமபுரி
தொகுதியில் போட்டியிடுவதாக உறுதி அளித்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக உழைத்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி ஏராளமானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அவர்களை மாவட்ட தலைவர் தாபா சிவா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.