நாகர்கோவில் மார்ச் 23
அதிமுக மாநில மீனவர் அணி இணை செயலாளர் பசிலியான் நசரேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், உச்சபட்சமாக அபராதம் விதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்போம் என்பது உட்பட பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் ஏமாற்றிய திமுக அரசு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரத்திலும் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை.
ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் போதும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் திமுக அரசின் மெத்தனப் போக்கால் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை வாட்டி வதைக்கிறது. அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 6 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த 14 பேருக்கும், இலங்கை மதிப்பில் நான்கரை லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 1.30 லட்சம் ரூபாயாகும். இதுவரை கடல் எல்லை தாண்டியதாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு, இலங்கை நீதிமன்றத்தில் இரண்டரை லட்சம் ரூபாய் வரையே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
அதையே கட்ட முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்துவரும் மீனவர்களுக்கு, இப்போது அபராதத் தொகையையும் இலங்கை நீதிமன்றங்கள் உச்சபட்சமாக உயர்த்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மீனவர்கள் கைது நடவடிக்கைகள், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்பிற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. ஆனால் திமுக ஆட்சியில் மட்டும் இந்த எண்ணிக்கைத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் நிலையே, இப்போதும் தொடர்வது மிகவும் துயரமான விசயம். முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், 569 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. அந்த ஒரே ஆண்டில் 73 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அதில் 96 மீனவர்களுக்கு 6 மாதங்கள் முதல் இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் 2024 ஆம் ஆண்டில் நடந்தது. இந்த ஆண்டிலும் இலங்கை கடற்படையின் அராஜகம் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது. அதற்கு முழுக்காரணம் திமுக அரசின் மெத்தனப் போக்குதான்!
அதுமட்டுமின்றி இலங்கையில் தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு படகுதான் வாழ்வாதாரம். அதை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் மெத்தனப் போக்கைக் கடைபிடிக்கும் திமுக அரசைக் கண்டிக்கிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.