அரியலூர்,ஜூலை 22:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, மக்காச்சோளம் மற்றும் மரவள்ளிகிழங்கு போன்ற பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கேரள மாநிலத்தில் வாய்வெடி மருந்து வைத்து மேற்கொள்வது போல் தமிழ்நாட்டிலும் உரிய ஆணையை பிறக்க வேண்டும்.
வனவிலங்குகள் மூலம் ஏற்படும் பயிசேதங்களை தடுக்க வேண்டும். வனங்களின் ஓரங்களில் தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும்.
வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக 14 மணி நேரம் வழங்க வேண்டும். இலவச மின்மோட்டார் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். 60 வயதை அடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.செந்தில்வேல் தலைமை விகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட துணைத் தலைவர் எம்.மணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இளங்கோவன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் க.கரும்பாயிரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்