நாகர்கோவில் ஜூன் 11
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கியும், பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு இனிப்பு மற்றும் ரோஜாப்பூ வழங்கியும், வரவேற்று அறிவுரை கூறி பேசும் போது கூறியதாவது,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்ற கல்வி உதவித் தொகை திட்டங்களைப்பற்றி விரிவாக எடுத்து கூறினார்.
தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (NMMS):
இத்தேர்வானது மாணவ, மாணவிகள் கல்வியில் இடைநிற்றலை தடுப்பதற்கும், வருவாயில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் கொண்டு வரப்பட்டது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி திறன் தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வில் அரசு நிர்ணய்த்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, 9-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு படிக்கும் வரை மாதம் ரூ.1,000/- வீதம் வருடத்திற்கு ரூ. 12 ஆயிரம், மத்திய அரசு வழங்கப்படுகிறது.
ஊரக திறன் ஆய்வு தேர்வு:
இத்தேர்வானது முழுக்க, முழுக்க கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன் பெறும் திட்டம் ஆகும். இத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கிராமப்புறங்களில் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் கொண்டு வரப்பட்டது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இத்தேர்வு நடைபெறும்.
ஒரு மாவட்டத்திலிருந்து 50 மாணவர்கள், 50 மாணவிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, 9-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு படிக்கும் வரை மாதம் ரூ. 1,000/- வீதம் வருடத்திற்கு ரூ. 12 ஆயிரம், மாநில அரசு மூலம் வழங்கப்படுகிறது.
புதுமை பெண் திட்டம் (மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திட்டம்) – மாணவிகளுக்கு மட்டும்
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் படிக்க வேண்டும். பெற்றோரின் வருமானத்தின் அடிப்படையில் உயர்கல்வி படிப்பதற்கு தேவையான பாடப்புத்தகம் பொது அறிவு நூல்கள் வாங்கும் விதத்தில் மாதம் ரூ. 1,000/- வழங்கப்படுகிறது.
தமிழ் புதல்வன் திட்டம் (மாநில அரசு மூலம்) – மாணவர்களுக்கு மட்டும்
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பெற்றோரின் வருமானத்தின் அடிப்படையில் வருடத்திற்கு ரூ. 1,000/- வழங்கப்படுகிறது.
பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்
இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து பெண் குழந்தைகளும் பயனடைவர். 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.500ஃ-ம், 6 ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1000/-ம், 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1,500/-ம் வழங்கப்படுகிறது. வருமான உச்ச வரம்பு இல்லை, மேலும் சாதிச் சான்றிதழ் இணைக்க வேண்டும்.
கல்வி கட்டணச் சலுகைகள்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மாநில அரசால் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு இல்லை.
பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான சலுகை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மாநில அரசால் சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு இல்லை.
முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களுக்கான சலுகை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவியர்களுக்கு மாநில அரசால் சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு இல்லை.
சிறப்புக் கட்டணச் சலுகை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு சிறப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்படுகிறது. அந்த சிறப்புக் கட்டணமானது கல்வி நிறுவனத்திற்கு அரசால் செலுத்தப்படும்.
இதர கட்டணச் சலுகைகள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்படுகிறது. அந்த தேர்வுக் கட்டணமானது கல்வி நிறுவனத்திற்கு மாநில அரசால் செலுத்தப்படும். ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் தேர்வுக் கட்டணமானது அரசு தேர்வுகள் இயக்குநரகத்திற்கு செலுத்தப்படும். பட்டபடிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்சார் படிப்புகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யும் மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்பக் கட்டணம், பதிவு கட்டணம் கட்டுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அந்த கட்டணமானது கல்வி நிறுவனத்திற்கு அரசால் செலுத்தப்படும்.
சுகாதாரக் குறைவான தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் (ப்ரிமெட்ரிக் 10 ஆம் வகுப்பு வரை)
சுகாதாரக் குறைவான தொழில் புரிவோரின் (துப்புரவுத் தொழில் செய்வோர், குப்பை பொறுக்குவோர், தோல் உரிப்பவர், தோல் பதனிடும் தொழில் புரிவோர்) குழந்தைகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. சாதி, மதம் இல்லை. வருமான வரம்பு இல்லை. இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு ரூ.1,850/- ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவ, மாணவியர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தக் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவியர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதியில் தங்கிப் பயிலாதவா்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.150/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ.2,250/- மற்றும் சிறப்பு மானியம் 750 சேர்த்து மொத்தம் ரூ.3,000/- வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கிப் பயில்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.525/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ.5,250/- மற்றும் சிறப்பு மானியம் 1000 சேர்த்து மொத்தம் ரூ.6,250/- வழங்கப்படுகிறது.
கல்வி உதவித் தொகை திட்டத்தினை மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் முறையாக எடுத்து சொல்லி அவர்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் நான் இந்த பள்ளிக்கூடத்தில் படித்த முன்னாள் மாணவர் என்ற முறையில் மாணவ, மாணவிகளுக்கு சொல்லக் கூடியது என்ன வென்றால், ஒழுக்க நெறிகளை முறையாக கையாள வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கு உள்ளாகமல் மாணவர்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வாழ வேண்டும்.
மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருப்பது கல்வியாகும். கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணர்ந்து தங்கள் குழந்தைகளை கல்வி பயில செய்வது மிக முக்கியமான கடமையாகும். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் முன்னேற்றத்திற்கு வழிகாட்ட கல்வியால் மட்டுமே முடியும். கஷ்டப்பட்டு படித்தவர்கள் இன்றைய உலகில் உயர்ந்த நிலையில் உள்ளார்கள். படிக்கின்ற காலத்தில் மாணவர்கள் தங்களது கவனத்தை சிதறடிக்காமல் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நாட்டிற்கு வழி காட்டியவர்கள் எல்லோரும் கல்வியில் சிறந்து விளங்கியவர்கள் என்பதை யாரும் மறந்து விட முடியாது.
நான் ஒரு ஆசிரியரின் மகன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். நான் இந்த பள்ளியில் பயிலும் போது தலைமை ஆசிரியராக சுவாமிநாதன் என்பவரையும், அப்துல்லா என்ற ஆசிரியரையும் என்னால் மறக்க முடியாது. மாணவர்கள் திறம்பட படித்து அதன் மூலம் தாங்கள் பெறும் வேலைவாய்ப்பு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்னுடைய குடும்ப உறுப்பினர்களும் இந்த பள்ளியில் படித்து விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக இருந்து வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த பள்ளியில் பயின்றவர்கள் என்பது பெருமைக்குரியதாகும். மேலும் மாணவர்கள் குருவை மதித்து அவர்கள் சொல்லுகின்ற பாடங்களையும், ஒழுக்க நெறிகளையும் கேட்டு வாழ்கையில் வெற்றி பெற வேண்டும். இப்பள்ளியில் மாணவர்களின் வெற்றிக்காக பாடுபட்ட ஆசிரியர் பெருமக்களை மனதார பாராட்டுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இலவச பாடப்புத்தகங்களை வழங்கியும், பள்ளியில் நடைபெற்ற ஆதார் சிறப்பு முகாம் மற்றும் சிறுசேமிப்பு கணக்கு தொடங்குவதையும் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருடன், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சாந்தினிபகவதியப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சாந்தி, தோவாளை வட்டார வளமைய பயிற்றுநர் ஜெசி, தோவாளை ஊராட்சி துணைத் தலைவர் தாணு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நீலா சுபாமுத்து, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், பள்ளி ஆசிரியர்கள், கிருஷ்ணன்புதூர் ஊர்த் தலைவர் கேசவன் மற்றும் பகவதியப்பன், தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.