சென்னை, ஏப் 23
சென்னை, வண்டலூரை அடுத்த தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் 22 மற்றும் 23 வது பட்டமளிப்பு விழா அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஆர்.ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தி, ஆண்டறிக்கை வாசித்தார். அதனைத் தொடர்ந்து, நாகலாந்து மாநில நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் இயக்குனர், பேராசிரியர், டாக்டர் இளையபெருமாள் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தி, பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்த மாணவ-மாணவியர் உட்பட, 310 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்…
“அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் தங்கள் தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறமைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்புக்கள் கிடைப்பதே அரிதாகி விட்ட இன்றைய சூழலில், கிடைத்த வாய்ப்புகளை மாணவர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகளை பெறுவதில் ஆர்வம் காட்டும் இளம் பொறியாளர்கள் அதேவேளையில், சொந்த தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.