கன்னியாகுமரி பிப் 1
கன்னியாகுமரியில் கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம் அமைக்க சுற்றுலா அலுவலகம் சார்பில் திட்டம்.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.இந்தியாவின் ஆரம்பம் இங்கு தான் இருக்கிறது. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, அதிகாலை சூர்ய உதயம், பார்த்த உடன் ஈர்க்கும் கடற்கரை என சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்ரீகர்களுக்கு பிடித்த இடமாக இருக்கிறது. திருச்செந்தூர்போல் இங்கும் நீராட பக்தர்கள் விரும்புகிறார்கள். ஆனால் கடலில் நீராட கன்னியாகுமரியில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பிட்ட இடத்தை தாண்டி செல்லாத வகையில் கடலில் கயிறும் கட்டி வைத்துள்ளார்கள். அதேநேரம் கடும் கட்டுப்பாடுகள் இருந்தாலும், சில சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியில் ஆபத்தை உணராமல் செல்வதால் கடலில் மூழ்குவதும், ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பதும் நடந்து வருகிறது.
இதனை தடுக்க, வெளிநாடுகளில் இருப்பது போன்று கடல் தண்ணீரை கொண்டு நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்றும், அதுவும் கடல் தண்ணீர் உள்ளே வந்து வெளியே செல்வது போல திட்டமிட்டு நீச்சல் குளத்தை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இப்படி நீச்சல் குளம் அமைக்கும்போது தண்ணீர் அசுத்தம் ஆகாது என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் கடல் தண்ணீர் கொண்ட நீச்சல் குளம் அமைப்பது தொடர்பாக சுற்றுலா அலுவலகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக உதவி செயற்பொறியாளருக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி 3 கடல்கள் சங்கமிக்கும் புனித இடம். இதனால் கன்னியாகுமரிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மிக யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு கன்னியாகுமரிக்கு வரும் அனைவரும் கடலில் குளித்து விட்டு புனித நீராக கன்னியாகுமரியில் இருந்து கடல் தண்ணீரை எடுத்து செல்கிறார்கள். கடலில் குளிக்கும்போது சில சமயம் கடல் அலை உள்ளே இழுத்து சென்று உயிரிழப்பு ஏற்படுகிறது.இதை தடுக்கும் பொருட்டு கன்னியாகுமரி கடற்கரையில் கடல் தண்ணீர் கொண்ட நீச்சல் குளம் அமைக்க வேண்டும். கடற்கரை ஓரமாக உள்ள உயர் காட்சி கோபுரம் அருகில் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் அரிப்பை தடுப்பதற்கு கற்கள் போடப்பட்டுள்ளது. இந்த கற்களை அகற்றிவிட்டு சுமார் 500 மீட்டர் நீளத்திற்கும், 25 முதல் 50 மீட்டர் அகலத்துடன் கூடிய கான்கிரீட்டால் ஆன நீச்சல் குளம் அமைக்க வேண்டும். இந்த நீச்சல் குளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்கு என்று சுமார் 100 மீட்டர் நீளத்தில் கடல் அலை இல்லாத இடமாக தேர்வு செய்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதமுள்ள இடத்தில் ஆண்கள் குளிப்பதற்கான இடத்தை தேர்வு செய்யலாம். நீச்சல் குளம் அமைக்க கோரிய பகுதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக காட்சி கோபுரம் அருகில் வருவதால் கடல் தண்ணீர் கொண்ட நீச்சல் குளம் அமைப்பது தொடர்பாக கள ஆய்வு செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.