தருமபுரி மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் மலையால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பயிர் சேதங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலருமான திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார்.மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். தருமபுரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் புயலின் காரணமாக 2,736 எக்டர் பரப்பில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள், பருத்தி மற்றும் கரும்பு ஆகிய வேளாண் பயிர்களும் 4, 822 எக்டர் பரப்பில் தக்காளி, மரவள்ளி, வாழை, மஞ்சள் சேதமடைந்துள்ளன என அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமங்களான பத்தலள்ளி,கொங்கரப்பட்டி, அதிகாரப்பட்டி, பொம்மிடி ,மருதிபட்டி, எம். குட்டப்பட்டி ஆகிய கிராமங்களில் இழப்பீடு
கோரிய விவசாயிகளின் விண்ணப்பங்களையும், அலுவலர்களின் புள்ளிவிவர ஆவணங்களையும் அறிக்கையுடன் ஒப்பீடு செய்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திவ்யதர்ஷினி தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, உதவி கலெக்டர்கள் காயத்ரி, சின்னசாமி, வேளாண்மை இணை இயக்குனர் மரிய ரவி, ஜெயக்குமார்,ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.