சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் பாதுகாவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என 300-க்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .
இவர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை ( பி.எப் ) வங்கியில் செலுத்தவில்லை என்றும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றும் சீருடைகளை முறையாக வழங்கவில்லை என்றும் விடுப்புகள் வழங்கவதில்லை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவமனையின் முகப்பு வாயிலில் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
மேலும் ஒப்பந்த பணியாளர்களுக்கு உரிய மேற்பார்வையாளர் பணியாளர்களின் சிறு சிறு குறைபாடுகளை பெரிதாக்கி தரக்குறைவாக பேசுவதாகவும் மிரட்டுவதாகவும் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து குறை கூறினார்கள் . இந்தப் போராட்டம் காலை 7:00 மணிக்கு தொடங்கியதற்கு பின்பு மண்டல அளவிலான பணியாளர்கள் கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி தந்த பின்பு 10-30 மணிக்கு மேல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்குச் சென்றனர் .