ஆக.30
திரளான பக்தர்கள் சாமிதரிசனம்
5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
செட்டிபாளையம், தியாகிகுமரன் காலனி சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர் பி.என்.ரோடு அண்ணாநகரை அடுத்த 4 செட்டிபாளையம், தியாகிகுமரன் காலனியில் சுடலை மகாராஜா, ராஜகாளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், பிரம்மசக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த 23-ந்தேதி தொடங்கி, பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளுடன் 1 வாரமாக விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சுடலை மகாராஜாவுக்கு 3 மணி நேரம் சிறப்பு பூ அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் தலைமை பூஜாரியும், பிரபல அருள்வாக்கு சித்தரும், சர்வசக்தி ஜனபேரவை நிறுவனத்தலைவருமான சுரேஷ் சுவாமிகள் தலைமையில் சுடலை மகாராஜா, சத்ராதி முண்டகசாமி, ராஜகாளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், பிரம்மசக்தி தெய்வங்களுக்கு படையல் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு மாசாண சுடலை ஈஸ்வரர் மயான வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், சுடலை மகாராஜா கொதிக்கும் சுடுநீரில் குளித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் விடிய, விடிய, காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமாக அசைவ உணவு வழங்கப்பட்டது. விழாவில் மும்மதத்தினர். கலந்து கொண்டது மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று அதிகாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு ஏந்தி வந்து, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. மு.நாகராசன், மண்டல தலைவர்கள் தம்பி கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், 15-வது வார்டு கவுன்சிலர் சாந்தி பாலசுப்பிரமணியம், தி.மு.க. நிர்வாகி திராவிட பாலு உள்பட அரசியல் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சர்வசக்தி ஜன பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் 11 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல் மற்றும் மஞ்சள் நீராடுதலுடன் பொங்கல் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சொர்ணகுமார் தலைமையில் கோவில் கமிட்டி நிர்வாகிகள், சர்வசக்தி ஜன பேரவை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.