ஈரோடு டிச 17
ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டு தொழில் முனைவுத் திட்டம் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் மற்றும் பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட அனைவரும் தங்களுக்கு தெரிந்த விருப்பமான, முன் அனுபவம் உள்ள தொழில் புரிந்து வருவாய் ஈட்டி பயன்பெற்று வாழ்க்கையில் முன்னேறும் பொருட்டு 2023-24-ம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டு தொழில் முனைவுத் திட்டம் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பதாரரே தொழிலை தெரிவு செய்து கொள்ள வேண்டும். திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 35 சதவீதம் அல்லது ரூ.3.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும்.
அதேபோல, பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் போஜ்னா திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஒவ்வொரு குடுபத்திற்கும் அதிகபட்சமாக 50 சதவீதம் அல்லது ரூ.50,000 இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். மேலும், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் ஆதிதிராவிட மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தவும் ஆதிதிராவிட மகளிர் பெயரில் நிலம் வாங்கவும், ஆதிதிராவிட மக்களின் நில உடமையை அதிகரிக்கும் பொருட்டும், அந்நிலத்தை மேம்படுத்த பல்வேறு
உதவிகள் அளித்து வேளாண் உற்பத்தி திறன் அதிகரிப்பதை நோக்கமாகவும் கொண்டு செயலப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை புன்செய் நிலம் அல்லது 2.50 ஏக்கர் வரை நன்செய் நிலம் வாங்கலாம். நிலத்தின் மதிப்பு அரசின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி நிர்ணயிக்கப்படும். மேலும் இத்திட்டத்தில் பயனாளியின் பெயரில் பத்திரம் பதிவு செய்யும் போது பத்திர பதிவு மற்றும் முத்திரைக் கட்டணம் செலவில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற 18 வயதிற்க்கு மேலும் 65 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் நிலம் வாங்க மற்றும் மேம்பாட்டுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் அல்லது ரூ.5.00 இலட்சம் இதில்
எது குறைவானதோ அத்தொகை மானியமாகவும், மீதமுள்ள தொகை வங்கி கடனாக அல்லது சொந்த முதலீடாக வழங்கப்படுகிறது.
2024-25-ம் ஆண்டு தாட்கோ திட்டங்களான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தில் 54 பயனாளிகளுக்கு ரூ.1,11,48,038 மதிப்பீட்டிலும், நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.5,00,000 மதிப்பீட்டிலும், பிரதான் மந்திரி – அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா (ன திட்டத்தில் 49 பயனாளிகளுக்கு ரூ.24,50,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ.1,40,98,038 மதிப்பீட்டில் மானியத்துடன், கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தாளவாடி வட்டம், தலமலை கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் தாட்கோ சார்பில் மானியத்துடன் கடன் உதவி பெற்று, நிறைந்த மனதுடன் தெரிவித்ததாவது,
தாட்கோ சார்பில் கனரக வாகனம் வாங்குவதற்கு மானியத்துடன் கடன் உதவி பெற்ற ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், தலமலை கிராமத்தைச் சார்ந்த ராஜா நான் தலமலை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நான் கடந்த 15 ஆண்டுகளாக வாடகைக்கு 4 சக்கர வாகனங்களை ஓட்டி வந்தேன். நீண்ட நாட்களாக சொந்த வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. பணத்திற்கு என்ன செய்ய செய்யலாம் என யோசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ், உரிய ஆவணங்களுடன் நான் விண்ணப்பித்திருந்தேன். இதில் எனது மனு ஏற்கப்பட்டு, கடந்த வாரம் எங்கள் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில், ரூ.9,82,000 மதிப்பீட்டிலான கனரக வாகனம் வாங்குவதற்கு ரூ.3,44,000 மதிப்பீட்டில் மானியமும், மீதமுள்ள தொகை கடனாகவும் வழங்கப்பட்டது. வாடகை வண்டி ஓட்டி வந்த நான், தற்பொழுது சொந்தமாக வாகனம் வாங்கி மகிழ்ச்சியுடன் ஒட்டி வருகின்றேன். எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களும் மேம்பாடு அடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.