கரூர் மாவட்டம் – செப்டம்பர் – 13
கரூர் ஜவகர் பஜாரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கரூர் மாவட்டத்திற்கான துணைப் பயிற்சி நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி முன்னிலை வசித்தார்.
பயிற்சி நிலையத்தை கலெக்டர் மீ.தங்கவேல் திறந்து பேசுகையில், கரூர் மாவட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1996 – ம் ஆண்டு முதல் கரூர் மாவட்டத்திற்கென கூட்டுறவு வேளாண்மை பயிற்சி நிலையம் இல்லாமல் இருந்தது.
நடப்பு ஆண்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து 62 மாணவ, மாணவிகள் நாமக்கல், திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண்மை பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு பட்டயப்பயிற்சி பெற தினமும் சுமார் 80 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு வந்தனர்.
இந்த மாணவர்களின் சேர்க்கை 28 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்து வந்தது. தற்போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கரூர் மாவட்டத்திலேயே கூட்டுறவு பட்டயப் பயிற்சி பெற்று பயனடையும் வகையில் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 112 கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளது. ஒவ்வொரு வருடமும் கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்திட பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிய கூட்டுறவு பட்டயப்பயிற்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
ஆதலால் இத்துணை பயிற்சி நிலையத்தில் நாமக்கல், திருச்சி கூட்டுறவு வேளாண்மை பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டில் பயிற்சி பெற்று வரும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 62 மாணவர்கள் இதில் பயன் பயடைந்துள்ளனர். எதிர்வரும் ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள 100 மாணவர்கள் கூட்டுறவு பட்டயப் பயிற்சியில் சேர்ந்து பயனுடைய உள்ளனர்.
என்றார் இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா, கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.