கன்னியாகுமரி,அக்.27-
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஞான தீபம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
அகஸ்தீஸ்வரத்தில் ஞானதீபம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் 32-வது ஆண்டு விழா பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. மாணவிகளின் இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். ஆசிரியர் பிரபாவதி வரவேற்று பேசினார். பள்ளியின் முதல்வர் மேகநாதன் ஆண்டறிக்கை படித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பேசும் போது கூறியதாவது:-
அனைவருக்கும் முன்னோடியாக தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பள்ளியின் வளர்ச்சிக்காக உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
கல்வி வளரும் போது மட்டுமே அறிவு வளரும். இதன் மூலம் சுகாதாரம் பேணி பாதுகாக்கப்படும். செல்வம் பெருகும். பள்ளி, கல்லூரி வாழ்வினை முடிக்கும் போது தலைசிறந்தவர்களாக, தன்னம்பிக்கை உடையவர்களாக, எதையும் சாதிக்க முடியும் என்ற உணர்வுள்ளவராக வெளி வர வேண்டும்.
மறைந்த இந்திய குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களோடு நான் அமைச்சராக இருக்கும் போது அவருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரோடு பங்கேற்ற விழாவில் அவரை விஞ்ஞானி என்று அழைத்தேன். இதற்கு பதிலளித்து அவர் கூறும் போது, விஞ்ஞானி என்பவர் நான் அல்ல. நமது உடல் உறுப்புகளான கண், காது, வாய், தலை, உடல் உள்ளுருப்புகளை தந்து நம்மை படைத்த இறைவன் தான் விஞ்ஞானி என்று குறிப்பிட்டார்.
உயர்ந்த நிலையை அடைந்தாலும் மறவாமல் இறைவனை உயர்த்தி அவரை பாராட்டுகின்றவன் இறைவனால் உயர்த்தப்படுவான். தாய், தந்தை, குருவை மதிக்க வேண்டும். இவர்களை மதிக்கின்றவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையினை அடைவார்கள். தாய், தந்தையர்கள் குழந்தைகளை கண்ணியமாக வளர்க்க வேண்டும். இதனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி செல்ல முடியும். கல்வி வளர்ச்சியால், அறிவு வளர்ச்சி ஏற்படுவதோடு, நாடு வளரும், வீடு வளரும், சமுதாயம் வளரும். கிராமங்கள், நகரங்கள் முன்னேறும்.
படிக்கின்ற மாணவர்கள் நல்ல குறிக்கோளை மனதில் ஏந்தி படிக்க வேண்டும். இதனால் நல்ல மருத்துவராக, நல்ல பொறியாளராக, நல்ல அரசியல்வாதியாக வர முடியும். சிறந்த மாணவர்களை உருவாக்குகின்ற ஆசிரியர்கள் சேவையினை மனதார பாராட்டி, வாழ்த்துகிறேன். மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கின்ற பொறுப்பு மிக்கவர்களாக விளங்கும் ஆசிரியர் பணி மிக முக்கியமானது, புனிதமானது. மாணவர்களுடைய வளர்ச்சிக்கு தங்களை அர்பணித்துள்ள ஆசிரியர்களை மீண்டும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என அவர் பேசினார்.
தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் பரிசுகளை வழங்கினார்.பள்ளி துணைத் தலைவர் சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆசிரியர் ஜெசி ரோஸ் நன்றி கூறினார். இவ்விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரத்தை அதிமுக பேரூர் செயலாளர் சிவபாலன் வரவேற்றார்.விழாவில் பள்ளி தலைவர் அரவிந்த், பொருளாளர் ஐயாசாமி பாண்டியன், ஐ.எம்.சி. ஒருங்கிணைப்பாளர் சகிலாஜோதி, பள்ளி நிர்வாக அலுவலர் மீனாஜோதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் பேருர் செயலாளர் சிவபாலன், கவுன்சிலர் விஜயன்,ஒன்றிய விவசாய அணி செயலாளர் பால்துரை, கிளைச் செயலாளர் சிவராஜன், பெரியவிளை கண்ணன், முத்துக்குமார்,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.