தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் உள்ள பழமையான கிணற்றை புராதான சின்னமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மடத்தூர் பகுதியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “இந்த பகுதியானது முந்தைய காலத்தில் ஞானதேசிகநல்லூர் என்று அழைக்கப்பெற்றது தற்பொழுது மடம் இருந்ததால் மடத்தூர் என்று பெயர் பெற்றதாக அந்த ஊரில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில் இருந்தே துலா வைத்து குடிநீர் எடுக்கப்பட்ட கிணறு ஒன்று தற்போது வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதன் அருகில் அக்கால கல் ஒன்று இன்று வரை இருக்கின்றது. மேலும் தற்போது வரை நீரானது எடுக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. ஆகவே இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் புராதான சின்னமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், ஊர் பெரியவர் ராமஜெயம், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.