கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 24
பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கலெக்டர் அறிவுறுத்தல்.
பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
குளித்தலை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மீ.தங்கவேல் தலைமை தாங்கி பல்வேறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளித்தலை நகராட்சி, வைகைநல்லூர் அக்ரஹாரம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வீடு வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெற்றுக் கொள்ளும் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் குளித்தலை பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணிகள் கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மருதூர் பேரூராட்சி கருங்கல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பால் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து தினசரி பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கடம்பர் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக தரமான உணவுப் பொருட்கள் பயன்படுத்துவதை உறுதி செய்து, சமையலறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றதா? என்பது குறித்தும், குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு உணவுகள் பரிமாறப்படுவது குறித்தும் நேரில் பார்வையிட்டதோடு மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கள ஆய்வு குறித்த அறிக்கையினை உடனடியாக வழங்கிடவும், பொதுமக்களின் மனுக்களின் மீது தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து உரிய தீர்வு காணவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செழியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி உட்பட பலர் உடன் இருந்தனர்.