தென் தாமரை குளம்., நவ. 2.
குமரி மாவட்டம் முகிலன் குடியிருப்பு சக்தி கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி முகிலன்குடியிருப்பு சக்தி மைதானத்தில் நேற்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான 19-வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்குபெறும் சிறந்த 12 கைப்பந்து அணிகள் கலந்து கொள்கின்றன. துவக்க விழா நிகழ்ச்சிக்கு முகிலன் குடியிருப்பு ஊர்தலைவர் ஆர்.எஸ். பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சக்தி கைப்பந்து கழக செயலாளர் செல்லசிவலிங்கம், பொருளாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாமிதோப்பு தலைமை பதி குரு பால ஜனாதிபதி போட்டியை தொடங்கி வைத்தார். சாமிதோப்பு அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் செயலாளர் சத்திய சேகர், முன்னாள் இந்திய கைப்பந்து வீரர் சிவராஜன், கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் கைப்பந்து பயிற்சியாளர் பழத்துரை, தேனி மாவட்ட கைப்பந்து பயிற்சியாளர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு முன்னாள் கைப்பந்து வீரர் அய்யாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் நேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக கோப்பை மற்றும் ரூ 5000,இரண்டாவது பரிசு கோப்பை மற்றும் ரூ. 4000, மூன்றாவது பரிசு ரூ. 3000, நான்காவது பரிசு ரூ. 2000 மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மூன்றாம் நாள் நடைபெறும் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.