கன்னியாகுமரி ஜூலை 27
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம்போல் சுற்றுலா படகு சேவை தொடங்கியது.
கடலில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை, மழை மற்றும் காற்று போன்ற காரணங்களால் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்து சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கேரளா, கர்நாடகா மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கன்னியாகுமரியில் குமரிமுனை, அகத்தீஸ்வரர், கொட்டாரம், அஞ்சுகிராமம், தோவாளை, ஆரல்வாய்மொழி, தனிக்கார கோணம், கீரிப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் குமரி கடலில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.மேலும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு அருகே சென்று பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலின் தன்மை இயல்பு நிலைக்கு திரும்பியது. கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம்போல் சுற்றுலா படகு சேவை நேற்று முதல் தொடங்கியது. கடலின் தன்மை இயல்பு நிலையில் இருப்பதால் சுற்றுலா படகு சேவை தொடங்கியதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.