மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தவரும் நல்லிணக்கத்தோடு இணைந்து கொண்டாடிய புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி நேற்று இரவு தொடங்கி நடைபெற்றது. புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார்களின் திருஉருவம் தாங்கிய ஐந்து தேர்கள் ஆலய வளாகத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.