நாகர்கோவில் பிப் 21
கன்னியாகுமரி கோட்டத்தில், அஞ்சல் துறை சார்பில் வசந்த விழா 10.02.2025 முதல் 28.02.2025 வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் வசந்த கால மலர் அலங்காரம், போஸ்டர்கள், செல்ஃபி பதாகை மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் தபால்தலை சேகரிப்பாளர் நாகராஜன் 17.02.2025 அன்று வசந்தகாலத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, மலர் தபால்தலைகளின் சிறப்பு மற்றும் தபால்தலைகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இளம் தலைமுறைக்கு அதன் பயன்களை விரிவாக எடுத்துக்கூறினார். இதன் ஒரு பகுதியாக, 19.02.2025 அன்று நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் தபால்தலை கண்காட்சி நடைபெற்றது. கண்கவரும் பூக்களைக் கொண்ட தபால்தலைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இதனை பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியர் கண்டுகளித்தனர். மேலும் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி மற்றும கதைசொல்லல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி நடத்தி அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகளில், கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் க. செந்தில் குமார், நாகர்கோவில் தலைமை அஞ்சலக மூத்த அஞ்சல் அதிகாரி சுரேஷ், தக்கலை தலைமை அஞ்சலக அதிகாரி குமார் ஆகியோர் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இந்நிகழ்வுகளை சிறப்பித்தனர்.