அஞ்சு கிராமம் டிச 9
விசிக அகஸ்தீஸ்வரம்
மாவட்ட மாணவரணி துணை செயலாளரும், சமூக சேவகருமான இந்திரா நகர் முத்துக்குமார் மாவட்ட கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அஞ்சு கிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்குளம் பகுதியில் 384 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 20/11/2023 அன்று தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.அப்போது குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சேது ராமலிங்கம் தலைமை தாங்கினார். அஞ்சு கிராமம் செயல் அலுவலர் திலகம் முன்னிலை வகித்தார். அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ, பேரூராட்சி துணைத் தலைவர் காந்தி ராஜ் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மேலும் பணம் செலுத்தி காத்திருந்தவர்களுக்கு சாவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். மேலும் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழை எளிய சொந்த வீடு இல்லாத மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் தொகை நிர்ணயிக்கப்பட்டது.இதனை அடுத்து சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் பணத்தைச் செலுத்தி வீடுகளுக்கான சாவியை பெற்றுக் கொண்டனர். மேலும் வீட்டில் குடியிருந்தவர்கள் தங்களது வசதிக்கேற்ப அதிக பணம் செலவழித்து டைல்ஸ் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து குடியிருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சம்பவ இடம் சென்று 28 வீடுகளைச் சார்ந்தவர்களிடம் உங்களுக்கு இங்கு வீடு கிடையாது நீங்கள் அரசாங்கத்திற்கு பணம் கட்டவில்லை. திருட்டுத்தனமாக போலி சாவிகளை பயன்படுத்தி அத்துமீறி வீட்டில் வசித்து வருகின்றீர்கள். உங்கள் மீது போலீஸீல் புகார் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். மேலும் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் . காலி செய்யாவிடில் வேறு பூட்டு போடப்படும் எனவும் கூறி உள்ளனர். குடியிருந்தோர் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, வீட்டு வரி ஆகியவை பெற்றுள்ளனர். மிகவும் ஏழைகள், அடித்தட்டு மக்கள், சொந்த வீடு இல்லாதவர்கள்,தினக்கூலிகளாக சுமார் ஒரு வருடம் குடியிருந்தவர்களை திடீரென வீட்டை காலி செய்ய சொல்வதின் மர்மம் என்ன என்று தெரியவில்லை. குறிப்பாக தலித் சமுதாயத்தினரை வீட்டை காலி செய்ய சொல்வது வன்கொடுமை சட்டத்திற்கு உட்பட்டதாகும். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் குடியிருப்போர் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை குறித்து நேரில் விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ஏழை மக்கள் குடியிருக்க உத்தரவாதம் வழங்க வேண்டும். இல்லையெனில் மாவட்டம் தழுவிய மாபெரும் போராட்டம் விசிக தலைமையில் நடைபெறும் என மனுவில் கூறியுள்ளார்.