கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பயிற்சி முகாமில், பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பது குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் .ஜெயஸ்ரீ முரளிதரன் ., காவல்துறை தலைவர் .பவானீஸ்வரி ., மற்றும் சமூக பாதுகாப்பு ஆணையர் .ஜானி டாம் வர்கீஸ் ., ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் 22.08.2024 நடைபெற்றது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் .ஜெயஸ்ரீ முரளிதரன் ., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், போலியான பயிற்றுநர்களால் NCC முகாம் நடத்தப்பட்டு பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தியதையடுத்து, இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், சிறப்பு புலனாய்வு குழு SIT ஒன்றை அமைத்து, மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து, வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை
மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகள் எடுக்கும் வகையில்,
காவல்துறை தலைவர் .பவானீஸ்வரி ., அவர்கள் தலைமையில் சிறப்பு
புலனாய்வு குழு SIT ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது SIT சட்ட ரீதியாக
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், குற்றவாளிகள், அவர்களுக்கு துணை போனவர்கள்,
தகவல் தெரிவிக்காமல் மறைத்தவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் முன்
நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பார்கள்.மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க விழிப்பணர்வுகள் ஏற்படுத்துவது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, எனது தலைமையில் பல்நோக்கு குழு (Multi Disciplinary Team MDT) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர், பள்ளிக்கல்வி இயக்குநர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மனநல மருத்துவர்கள், காவல்துறை ஆய்வாளர், குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க முன் வர வேண்டும். அதற்காக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போக்சோ சட்டம் பிரிவு 23 -ன்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் விபரம், பெற்றோர்களின் விபரம் மற்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் பாதுகாக்கப்படும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் குழுவை சந்தித்து தகவல் தெரிவிக்க வேண்டுமென்றால் 22.08.2024 முதல் விசாரணை நடைபெறும் நாட்கள் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள சுற்றுலா மாளிகையில் மாலை 07.00 மணிக்கு மேல் நேரடியாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் இரகசியம் காக்கப்படும் என சமூகநலத்துறை செயலாளர் .ஜெயஸ்ரீ முரளிதரன் , அவர்கள்
தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் .சரவணன், மன நல மருத்துவர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.