அரியலூர், ஜூலை:26
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு வட்டத்தை தேர்ந்தெடுத்து அவ்வட்டத்தில் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் தம் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் நேற்றைய தினம்
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அரியலூர் வட்டம், அரியலூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தினை பார்வையிட்டு கால்நடைகளுக்கு மேற்கொள்ளப்படும் நோய் பரிசோதனைகள், கால்நடைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்ததுடன் பதிவேடுகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்முறை கிடங்கினை பார்வையிட்டு உணவுப் பொருட்களின் விவரம் மற்றும் தரம் குறித்தும், உணவுப் பொருட்கள் காலவதியாகும் நாள் குறித்த விவரம் மற்றும் உணவுப் பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும், உரிய அளவிலும் அனுப்பிவைக்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், இச்சேமிப்பு கிடங்கிற்கு உணவுப்பொருட்கள் வரத்து குறித்தும், இருப்புகள் குறித்தும், விநியோகம் குறித்தும் பதிவேடுகளில் உரியவாறு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், அரியலூர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் கல்லூரி விடுதியினை பார்வையிட்டு, மாணவர்களின் வருகைப்பதிவேடு, விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், பொருட்களின் இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததுடன் சமையல் கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை பார்வையிட்டு, மருந்து மாத்திரைகள் இருப்பு நிலை, சிகிச்சை பிரிவுகள் விவரம், வருகைதரும் நோயாளிகளின் எண்ணிக்கை, படுக்கை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டதுடன் நோயாளிகளுக்கு தாமதமின்றி உரிய நேரத்தில் முறையான சிகிச்சைகள் வழங்க வேண்டும் என சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, அரியலூர் நியாய விலைக்கடையினை பார்வையிட்டு இருப்பில் உள்ள பொருட்களின் விவரம் மற்றும் தரம், மின்னணு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு சாதனங்கள் மூலம் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்ததுடன், பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடமும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அரியலூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கோப்புகளை பார்வையிட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்ததுடன், சிசிடிவி கண்காணிப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மையத்தினைப் பார்வையிட்டு கணினியில் மனுக்கள் பதிவு செய்யும் முறைகள், பதிவு செய்யபட்டுள்ள மனுக்கள் எண்ணிக்கை விவரம் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தானியங்கி மழைமானியினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு, முடிவுற்ற பணிகளின் விவரம், பணிகள் முடிவுறும் காலம், நிதி ஒதுக்கீடு, கட்டுமான பொருட்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்து, பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அரியலூர் வட்டம், கல்லங்குறிச்சி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, மையத்திற்கு வருகைதரும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் கேட்டறிந்ததுடன் அங்கன்வாடி மையத்தினை தொடர்ந்து தூய்மையாக பராமரித்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், கல்லங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ள விவரம், கோப்புகளில் சிட்டா பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள விபரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கல்லங்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய குளம் அமைத்தல் பணியினையும் பார்வையிட்டு முடிக்கப்பட்டுள்ள பணிகள், கரைகள் பலப்படுத்துதல் பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், கடுகூர் ஊராட்சி, கால்நடை மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் இருப்பு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். தொடர்ந்து கடுகூர் வட்டார சமுதாய நல மையத்தினை பார்வையிட்டு வருகைதரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் சிகிக்சைகள், இருப்பில் உள்ள மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், விளாங்குடி பால் குளிர்வு நிலையத்தினை பார்வையிட்டு பால் குளீருட்டும் செயல்முறைகள், கொள்முதல் செய்யப்படும் பால் அளவுகள், பால் குளிர்வித்து சேமிக்கப்படும் முறைகள், பிற இடங்களுக்கு பால் விநியோகம் செய்யபப்டுவது உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ரெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பார்வையிட்டு மாணவர்களை அவர்களது தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்புத்தகங்ளை வாசிக்க சொல்லி அவர்களது கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், வாசிப்பு திறன் குறைவாக காணப்படும் குழந்தைகளுக்கு முறையான பயிற்சிகள் வழங்கவும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகத்தினை பார்வையிட்டு பதிவேடுகள், ஊரக வளர்ச்சி திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் பதிவு விவரங்கள் குறித்த ஆய்வு செய்தார்.
பின்னர், கீழப்பழுவூர் ஊராட்சிகுட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு திட்டம் குறித்த விவரங்கள், அரங்கத்தின் கட்டுமான வரைபடங்கள், நிதி ஒதுக்கீடு, பணி தொடங்கிய காலம், பணி முடிவுறும் காலம், கட்டுமான பொருட்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியினை பார்வையிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பாடப்பிரிவுகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து, கல்லூரி புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ;அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டார்.
பின்னர், வாரணவாசி கிராமத்தில் உள்ள புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தினை பார்வையிட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டை, கனிமதாது, புதைப்படிவ பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அரிய பொருட்கள் குறித்த விவரங்கள், அருங்காட்சியகத்திற்கு தினமும் வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, அருங்காட்சியகம் செயல்படும் நேரம், விடுமுறை நாட்கள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்ததுடன், அருங்காட்சியகம் தொடர்பான பல்வேறு தகவல்கள் அடங்கிய குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை முதல் அரியலூரர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான 69 மனுக்கள் பெறப்பட்டது.
இவ்வாய்வில் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், துணை இயக்குநர் சுகாதாராப் பணிகள் மரு.அஜிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்