தென்காசி மாவட்டத்தில் சுமார் 2 கோடி மதிப்பீட்டில் 69,689 மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்கும் பணியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிநாடார், ராஜா, சதன் திருமலைக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கு விழா நடைபெற்றது. கிராமப்புறத்தில் தையல் தெரிந்த பெண்களை குழுவாக இணைத்து பெண்களுக்கு வருமான வாய்ப்பு ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக வாழ்வில் முன்னேற்ற தமிழக அரசு முடிவு செய்து 2013 -ஆம் ஆண்டு அண்ணா மகளிர் தையல் தொழிலாளர் தொழில் கூட்டுறவு சங்கமாக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த சங்கத்தில் 20 வயது முதல் 40 வயது வரை உள்ள 1074 பெண்கள் உறுப்பினராக உள்ளனர். இச்சங்கம் மூலம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும் பணி 2013 – ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2024-25 ஆம் கல்வியாண்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 1021 பள்ளிகளில் 69,689 மாணவ மாணவிகளுக்கு சுமார் 2 கோடி மதிப்பீட்டில் சீருடை வழங்கப்பட்டது. இந்த பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி, துணை தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.