கிருஷ்ணகிரி,ஜுன்.20-
தமிழக முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றார். அங்கு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது பொதுமக்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் கூறியதாவது: இந்த பகுதியில் மது குடிக்க இளைஞர்கள் பலர் வருவதால் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும், இங்கு போலீசார் தினமும் ரோந்து வந்தாலும் இரவு நேரங்களில் அடிக்கடி இந்த பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும், இங்கு 197 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க இங்கு சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் சுற்றுச்சுவர் கட்டிட வேண்டும். மழைக்காலங்களில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வீடுகளுக்குள் வருவதால், கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்திட வேண்டும். மேலும் இங்குள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் சில வீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நபர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் குடியிருப்பதை தடுத்து, அவர்களால் ஏற்படும் சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும், இங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா? என கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் நல வாரிய சங்கத்தின் செயலாளர் வேண்டுகோள் வைத்தார். இந்தப் பகுதியில் பூங்காவிற்குரிய இடத்தில் ஆக்கிரமித்து 3 வீடுகள் கட்டப்பட்டுள்ளதை அகற்றி, பூங்கா அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். பின்னர் எஸ்.பி. தங்கதுரை அந்த பகுதி பொதுமக்களிடம் கூறியதாவது: இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை அதிகரித்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். பூங்கா ஆக்கிரமிப்பு, கால்வாய் பிரச்சினை, மேலும் இந்த அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நபர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் குடியிருக்கும் அரசு வீடுகள் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் மூலம் துறை சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதே போல கிருஷ்ணகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.