தமிழக வெற்றி கழகம் கட்சியில் தலைவர் விஜய்க்கு பரிசாக கொடுப்பதாக கூறி வெள்ளி வேல் அபேஸ்!
ராமநாதபுரம் மாவட்டத் தலைவரின் கணவர் மீது புகார்!!
உள் கட்சி பூசல் வெடிப்பு காரணமாக தொண்டர்கள் அதிருப்தி
ராமநாதபுரம், டிச.19-
ராமநாதபுரம் மாவட்டம் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கு கொடுக்க வாங்கிய வெள்ளி வேலை மாவட்ட தலைவரின் கணவர் ஜெயபாலா ஏமாற்றி தானே வைத்து கொண்டதுடன் இளைஞர்களுக்குவிளையாட்டு உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறியும் பல வழிகளில் பணம் மோசடி செய்து விட்டார் என்று அடுக்கு அடுக்காக மாவட்ட அமைப்பாளர் ராஜா கட்சியின் தலைவர் மற்றும் பொது செயலாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் உள் கட்சி பூசல் வெடித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா அறிக்கையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட மூவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மாவட்டத் தலைவர் குறிப்பிட்ட நபர்களில் ஒருவர் ஆன ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளராக பயணித்து வந்த ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியதாவது:
நான் தமிழக வெற்றி கழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா மற்றும் அவரது கணவர் பற்றி தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன். மனுவில் நான் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலர்விழி ஜெய பாலா திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவரது கணவர் ஜெயபாலா ஆரம்பத்தில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நான் சிறு வயது முதல் விஜய் ரசிகனாகவும் தற்போது அவரது கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் ஜெயபாலா பழக்கத்தின் பிறகு கட்சி மாநாட்டிற்கு விளம்பரம் செய்ய என்று என்னிடம் ரூபாய் ஒரு லட்சமும் மாநாட்டில் தளபதி விஜய்க்கு பரிசு பொருளாக வெள்ளி வேல் வழங்க வேண்டும் என்று என்னிடம் கூறியதால் நான் ரூபாய் 1.30 லட்சம் மதிப்பில் ஐந்தரை அடி உயரத்தில் வெள்ளி வேல் வாங்கி இராமநாதபுரம் வழிவிடும் முருகன் கோயிலில் பூஜை செய்து தலைவரின் கணவர் ஜெயபாலாவிடம் வழங்கினேன். அந்த வெள்ளி வேலை தளபதிக்கு பரிசாக வழங்காமல் அவரே வைத்துக் கொண்டு ஏமாற்றி விட்டார். அத்துடன் மட்டுமில்லாமல் மாநாட்டிற்கு செல்வதற்கு உடனடியாக ரூபாய் ஒன்றரை லட்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கினார். தொண்டர்களுக்கு உணவு வாங்கி தருவதாக கூறி ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் என்னை செலவு செய்ய கூறியதால் செலவு செய்தேன். இதுபோல் மீண்டும் மீண்டும் பணம் கேட்டார். ஒரு கட்டத்தில் தனக்கு ஆடம்பரக் கார் 18 லட்சத்திற்கு வாங்க வேண்டும் வாங்கித்தா… என கூறினார். எங்கள் பகுதி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கேட்டதற்கு நான் மாவட்டத் தலைவரின் கணவரிடம் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு பணம் கொடுத்தேன். ஆனால் அவர் பணத்தை பெற்று கொண்டு விளையாட்டு உபகரணங்கள் வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டார். கட்சி செலவுக்கு என்னிடம் பணம் வாங்கிவிட்டு தற்போது தொடர்ந்து என்னை ஏமாற்றி வருகிறார். அவர் கட்சித் தொண்டர்கள் யாரையும் ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக தங்களின் ஆலோசனைக்காக இந்த மனுவை சமர்ப்பிக்கிறேன்.
என்று புகார் மனு தலைமைக்கு அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் மாவட்ட ஆலோசகர் முருகேசன் உடன் இருந்தார்.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் உள் பூசல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. கட்சியில் கோஷ்டி பூசலால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.