புதுக்கடை, நவ- 20
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்ணம் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரும் சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவருமான செல்வ பெருந்தகை நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன்
ஆட்சியர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம், கிளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், விஜய் வசந்த் எம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய செல்வப் பெருந்தகை கூறியதாவது:-
தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகம் கட்டுமானத்தில் குளறுபடி இருப்பதாக ஏற்கனவே அரசின் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமில்லாமல் 25 உயிர்கள் பலியாகி உள்ளது. மணல் திட்டுகளை அகற்றவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்மந்தமாக அரசுக்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.
காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைப்பது மற்றும் மீனவர்களுடைய உயிர்பலி பிரச்சனை இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் பொருட்டு இன்று நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரைப்போம்.
குமரி மாவட்டத்தில் ஐஆர் இ மணல் எடுப்பு சம்பந்தமாக மக்கள் போராட்டத்தை ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மக்களுக்கு எதிராக எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது. மணல் எடுப்பது சம்பந்தமாக வரும் டிசம்பர் மாத நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழி சம்பந்தமாக அதை சீரமைப்பதற்கு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்த வழக்குகளை விரைவில் முடிக்க ஆய்வுக் கூட்டத்தில் முடி வெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.