கீழக்கரை,செப்.19-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களேஸ்வரி நகர் மற்றும் கிழக்கு மங்களேஸ்வரி நகருக்கு அருகாமையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கண் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் பெருங்களரி உற்சவ விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை கடற்கரையில் நீராடிய பின்பு அருள்மிகு ஸ்ரீ கண்காட்சி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடல் நீரில் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பொது சைவ அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதன்கிழமை அதிகாலையில் கோவிலில் முருகசெல்வம் சாமியாடி என்பவர் கொதிக்கும் சட்டியில் நெய் ஊற்றி அதில் பலகாரத்தை வேகவைத்து தன் கைகளை கொண்டு மூன்று முறை பலகாரத்தை அள்ளி குழந்தைகள் ஏந்திய பாத்திரத்தில் போடுவார் பிறகு பக்தர்கள் மீது சூடான நெய்யை தெளிக்கும் நூதன வேண்டுதல் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து ஸ்ரீ கண் காமாட்சி அம்மன், சிற்றம்மன், லாட முனியசாமி,கருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கீழக்கரை, மாயாகுளம், முள்ளுவாடி, ஏர்வாடி போன்ற பல ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியை மாயா குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் தலைமை தாங்கினார். ஏர்வாடி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் மாயாகுளம் கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.