ராமநாதபுரம், டிச.23 – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க 11வது மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பாரி, மாநில செயலாளர்
சோமசுந்தரம், மாநில
பொருளாளர் விஜயபாஸ்கர் மாவட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரகாஷ் பாபு வரவேற்றார்.
மாநிலத் தலைவர் ரமேஷ் கூறியதாவது:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தில்
25- ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஊழியர் நலன், சமூக நலன் சார்ந்து இச்சங்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் சார்ந்து நாங்கள் கோரும் கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில் போராட தயாராக உள்ளோம். அரசு தான் எடுக்கும் அறை முடிவுகளை விலக்கி கொண்டு, செம்மையான நிர்வாகத்திற்கு அரசு தற்சார்பு ஆணையம் ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு
உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வீடு வழங்கும் திட்ட இலக்குகளை முழுமையாக எட்ட நிர்ணயிக்கப்படும் நிதியை அரசுகள் தாமதமின்றி விடுவிக்க வேண்டும். தேர்தல் நேர வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். ஊழியர்களுடன் அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஊராட்சிகளை பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சி களுடன் இணைப்பு என்பது பேராபத்துகளுக்கு வழிவகுக்கும் முடிவுகளை அரசு விலக்கி கொள்ள வேண்டும். இதனால் பல்வேறு சுமைகளுக்கு ஆளாகும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அரசு ஊழியர்களின ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாணை வெளியிட வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மட்டுமின்றி, ஊழியர் சங்க நிர்வாகிகளின கருத்துகளையும் அரசு ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க கோருதல், மாநகராட்சி, நகராட்சி உடன் ஊராட்சிகள் இணைப்பை கைவிட கோருதல், பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை விலக்கிக் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோருதல், ஒப்படைப்பு விடுப்பை அமல்படுத்த கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்றக்கோரி பிப்ரவரியில் 11 வது மாநில மாநாடு பிப். இறுதி வாரம் அல்லது மார்ச் முதல் வாரம் ராமநாதபுரத்தில் நடத்துதென தீர்மானம் நிறைவேற்றினர்.
மாநில துணை தலைவர்கள் செல்வக்குமார், சவுந்தரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் ராமநாதன் நன்றி கூறினார்.