நாகர்கோவில் டிச 1
ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி செய்யப்பட உள்ளது என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடுக்கரை, காட்டுப்புதூர், திடல் ஆகிய ஊராட்சிகளில் கடுக்கரை ஊராட்சியில் வாழைக்கோணம், அண்ணாநகர், ஆலடி, ஆலடி காலனி, கடுக்கரை போன்ற குக்கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் மொத்தம் 1,236 வீடுகளும், 3,877 மக்கள் தொகையும் உள்ளன. அதுபோன்று காட்டுப்புதூர் ஊராட்சியில் இடைக்கோடு, மருத்துவர் காலனி, பூமணி நகர், புது காலனி, பிராமணக்கோணம், கண்ணகி நகர், காற்றாடிவிளை, காட்டுப்புதூர் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மொத்தம் 1,025 வீடுகளும், 4,058 மக்கள் தொகையும் உள்ளது. இதுபோன்று திடல் ஊராட்சியில் ரெத்தினபுரம், திடல், மேலத்திடல், நைனார் தோப்பு, கடம்படி விளாகம், கடம்படி விளாகம் காலனி, கொத்தம்பாறை, இரவிபுதூர், கேசவநேரி, ஆணைக்கல் ஆகிய குக்கிராமங்கள் உள்ளது. இங்கு 4,296 மக்கள் தொகை உள்ளது.
இந்த ஊராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக கோடை காலங்களில் கடுமையான குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனிடையே அந்தந்த ஊராட்சி பகுதிகளில் சில ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும், கோடை காலங்களில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் குடிநீர் விநியோகிக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் பெரும் இன்னலுக்கு ஆளானதுடன், பொதுமக்களும் குடி தண்ணிர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனிடையே மேற்கண்ட ஊராட்சிக்குட்பட்ட 24 குக்கிராம பகுதியை சார்ந்த பொதுமக்கள் இப்பகுதியில் ஏற்படுகின்ற குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து, கோடை காலங்களில் நிரந்தரமாக இப்பகுதி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் தெரிசனங்கோப்பு, பழையாற்று பகுதியிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோக துறை மூலம் ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் தெரிசனங்கோப்பு, பழையாற்று பகுதியிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம்; கடுக்கரை, காட்டுப்புதூர், திடல் ஊராட்சிக்குட்பட்ட 24 குக்கிராமங்களுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட உள்ளது.
இதனால் பல ஆண்டு காலமாக கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மேற்கண்ட ஊராட்சியை சார்ந்த 24 குக்கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் குடி தண்ணீர் தட்டுப்பாடின்றி இருப்பதற்கு இத்திட்டம் வழிவகை செய்யும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.