ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுரை
போகலூர், நவ.17-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ராமநாதபுரம் ராமேஸ்வரம் நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு செய்து தெரிவிக்கையில்:
ஒவ்வொரு நகராட்சியிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு வடிகால் வாரியத் துறையின் மூலம் குடிநீர் குழாய்கள் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுத்திட வேண்டும். அதேபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்படுவதையையும் சீராக சென்றடைவதையும் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை அலுவலர்கள் முக்கியத்துவம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நகராட்சி பகுதிகளில் தற்போது மழைக்காலத்தை கருத்தில் கொண்டு மழை நீர் தேங்காத வண்ணம் கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை கண்டறிந்து அவ்வப்போது சீர் செய்திட வேண்டும். அடைப்பின் காரணமாக கழிவுநீர் சாலையில் வெளியேறும் போது பொது மக்களுக்கு சுகாதாரத்தை பாதிப்பது மட்டுமின்றி நோய் தொற்றுக்கு காரணமாக இருந்திடும் எனவே அது போன்ற நிலைகளை உருவாக்காமல் நகராட்சி நிர்வாகம் கண்காணித்து செயல்பட வேண்டும். குறிப்பாக குடிநீர் குழாய் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் தொடர்பாக சாலைகளை பணி முடிந்ததும் அதை அவ்வப்போது சரி செய்திட வேண்டும். சாலை வசதி குடிநீர் வசதி பாதாள சாக்கடை இவை மூன்றும் சீராக இருக்கும்போது பொதுமக்களின் முக்கிய தேவைகள் நிறைவேற்றப்படுவதுடன் நகராட்சி நிர்வாகத்தின் பணிகள் சிறப்பு மிக்கதாக அமையும். எனவே நகராட்சி பகுதியில் பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை மேற்கொண்டு புகார்களை தவிர்த்து பொதுமக்களின் கோரிக்கைகளையும் சரி செய்து சிறப்புடன் செயல்பட வேண்டும், என, மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கண்காணிப்பு பொறியாளர் முரளி மனோகர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் மகாலிங்கம், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர் கான், ராமநாதபுரம் நகராட்சி துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன், ராமேஸ்வரம் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.