மார்த்தாண்டம், ஏப்.17-
நித்திரவிளை அருகே பூத்துறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மூன்றுமுக்கு என்ற இடத்தில் வேகத்தடை அருகே சிறிய அளவில் பள்ளம் ஒன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக காணப்படுகிறது. தற்போது மழை காரணமாக அது பெரிய பள்ளமாக மாறி உள்ளது.
இந்த வழியாகத்தான் பூத்துறை, இரயுமன்துறை, நித்திரவிளை காவல் நிலையம், சமத்துவபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மேலும் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சில நேரங்கள் பயணிகள் ஆட்டோக்கள் செல்லும்போது இந்த பள்ளத்தில் சிக்கி, பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தான் கடந்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஆகவே வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கு முன் மூன்று முக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.