தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தனியார் பங்களிப்புடன் குடியை மறக்க (போதை) மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மேயர் “தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இதுவரை 19 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். பூங்கா இல்லாத பகுதியான முத்தையாபுரம் பகுதியில் விரைவில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும் முத்துநகர் பூங்கா உள்ளிட்ட கடற்கரை பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளது. தனியார் பங்களிப்புடன் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதுவரை குடிநீர் இணைப்பு இல்லாத பகுதி மக்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர்கள் தூத்துக்குடி மாநகராட்சி தீர்வை கட்டணம் அதிகமாக உள்ளது. அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
திமுக உறுப்பினர் கனகராஜ் பேசும்போது, “பழமை வாய்ந்த சங்க நாராயணன் பிள்ளை பூங்காவை சீரமைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்மேலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். முன்னதாக மாநகராட்சி வழக்கறிஞர் சாமுவேல் ராஜேந்திரன் மறைவுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.