நாகர்கோவில் – நவ – 02,
குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.டைசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “செலவு குறைவான, பாதுகாப்பான பயணத்திற்கு மக்களின் பெரும் நம்பிக்கையாக இருப்பதே ரயில் பயணம்தான். அதையே கேள்விக் குறியாக்கியுள்ளது பாஜக அரசு. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே ரயில் விபத்துகள் அன்றாடச் செய்திகளாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை அருகே கவரப்பேட்டையில் ரயில் விபத்து, அஸ்ஸாம், மும்பையில் ரயில்கள் தடம் புரண்டது என ஒரேவாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. இதைப்பற்றியெல்லாம் சிந்தனையே இல்லாமல் பாசிச எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது பாஜக அரசு. காங்கிரஸ் ஆட்சியின் போது ரயில்வேத்துறைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு நிதி ஒதுக்குவது முதல் காலிப்பணியிடங்களை நிரப்புவதுவரை உடனுக்குடன் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் பாஜக அரசுக்கு மக்களைப் பற்றிய சிந்தனை துளிகூட இல்லை. அதன் விளைவுதான் தேசத்தையே மிரளச் செய்யும் ரயில் விபத்துகள்.
நாடு முழுவதும் சேர்த்து ரயில்வேயில் ஆண்டுக்கு 55 ஆயிரம் சிக்னல்கள் பழுதடைகின்றன. பழுதான சிகனல்களை மாற்ற 7500 கோடி ரூபாய் தேவை. ஆனால் அந்த அளவுக்கு நிதியை ஒதுக்காமல் பெயர் அளவிற்கு குறிப்பிட்டத் தொகையை ஒதுக்குகிறது பாஜக அரசு. இதேபோல் ஆண்டுக்கு 200 சிக்னல்கள் காலாவதியாகின்றன. அவற்றில் நூறு சிக்னல் மட்டுமே புதுப்பிக்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் சிக்னல்கள் அமைக்கப்பட்ட பின்னர் அதை எப்படிக் கையாள்வது என்னும் பயிற்சியைக் கூட ரயில்வே பணியாளர்களுக்கு வழங்குவதில்லை.
சிக்னல் பராமரிப்பில் மட்டும் 14 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலம், பொதுத்துறை நிறுவனங்களின் பொற்காலம். அப்போது உருவாக்கப்பட்ட முறையை சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது நரேந்திர மோடியின் அரசு. அந்தவகையில், சிக்னல்களை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் அதை ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் கொடுத்துள்ளனர். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு போதிய பயிற்சியும், திறனும் இல்லாததும் ரயில் விபத்துகளுக்கு காரணம் ஆகிறது.
இப்போதுகூட நாடு முழுவதும் ரயில்வே துறையில் 3 லட்சத்து 12 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் 80 ஆயிரம் பணியிடங்கள் தண்டவாளப் பராமரிப்புப் பிரிவில் மட்டும் காலியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 4700 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் பழுதடைவதாகவும், ஆனால் 2500 கிலோ மீட்டர் தண்டவாளமே புனரமைக்கப்படுவதாகவும் அணில் கடோட்கர் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியது. அதைக்கூட சரி செய்யவில்லை பாஜக அரசு.
தொடர்ந்து ரயில் விபத்துகள் உச்சம் பெற்று வரும் நிலையிலும், தேசிய ரயில் பாதுகாப்பு நிதியை ஆண்டுதோறும் குறைத்து வருவதும், அதைக் கொண்டு மிக, மிகக் குறைவான பணிகளையே மேற்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது பாஜக அரசு. ரயில் விபத்துக்களைத் தவிர்க்க ‘கவச்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மக்கள் நலனில் அக்கறை இல்லாத பாஜக அதைப் பொருட்படுத்துவதே இல்லை. நாடு முழுவதும் உள்ள 68 ஆயிரம் கிலோ மீட்டர் தண்டவாளத்திற்கு கவச் பொருத்த 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். இதுவரை 1465 கிலோ மீட்டர் தூரத்திற்குத்தான் கவச் பொருத்தப்பட்டுள்ளது.
இதேபோல் இந்திய ரயில்வேயில் 14,500 ரயில் இஞ்சின்கள் உள்ளன. அதில் கவச் பொருத்த பத்தாயிரம் கோடி ஒதுக்க வேண்டும். ஆனால் இந்த நிதியை ஒதுக்கி, ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அக்கறை பாசிச பாஜக அரசுக்கு இல்லை. மொத்தம் 45 ஆயிரம் கோடி ஒதுக்கினால் ரயில் விபத்துகளைத் தவிர்க்கலாம். ஆனால் இந்த நிதியாண்டில் 1112 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறைவாக நிதி ஒதுக்கினால் எப்படி ரயில் விபத்துகளைத் தவிர்க்கமுடியும்?
காங்கிரஸ் ஆட்சியின் போது ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்பும் அதிகாரம் ரயில்வே துறைக்கு இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் நிதி அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறவேண்டும் என விதியைத் திருத்தியிருக்கிறார்கள். நிதி அமைச்சகம், ரயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த நாள்முதல் சகலதுறைகளையும் சிதைத்து வருகிறது. அதற்கு ரயில்வேதுறையும் விதிவிலக்கு அல்ல. இத்தனை ரயில் விபத்து சம்பவங்களுக்கும் பின்னரேனும், மக்கள் நலன், பாதுகாப்பான ரயில் பயணம் ஆகியவற்றை முன்னிறுத்தி தொடர் ரயில் விபத்துக்களைத் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க மோடி அரசை வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.