பரமக்குடி,டிச.4 : பரமக்குடி ரயில்வே நிலையம் அருகில்
கடந்த 1984 ம் ஆண்டு ஒருங்கிணைந்த சிவகங்கை, விருதுநகர் ,தூத்துக்குடி , ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த போது ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெண் ஊழியர்கள் உள்பட 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதனிடையே ஏற்கனவே இரு முறை மதுரைக்கு மாற்றப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் இத்திட்டம் கைவிடப்பட்டு பரமக்குடியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது , பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை மதுரைக்கு மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பரமக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன் தலைமையில்,நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் வழக்கறிஞர் யுவராஜ்,துணைத் தலைவர் வழக்கறிஞர் பசுமலை,இணைச் செயலாளர் வழக்கறிஞர் வடிவேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் பரமக்குடியில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ரயில்வே தபால் பிரிப்பகத்தை மதுரைக்கு மாற்றுவதை கண்டித்து கோஷமிட்டனர்.100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் நவநாதன், இளமுருகன்,செந்தில்குமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள்,பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
படம்
பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை மதுரைக்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது