நாகர்கோவில் ஆகஸ்ட் 18
ஆரல்வாய்மொழி – குமாரபுரம் இணைப்புச் சாலையின் குறுக்கே செல்கின்ற சுபாஷ்நகர் ரெயில்வே பாதையின் மேல் மேம்பாலம் செல்கிறது. இந்நிலையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதை தொடர்ந்து, இந்த பழைய மேம்பாலத்தினை இடித்து புதிய மேம்பாலம் அமைப்பதற்காக 2018-ம் ஆண்டு குமாரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரயில்வே அதிகாரிகள் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் இந்த சாலையானது மிக முக்கியமான சாலை என்பதால் நவீன தொழில்நுட்ப முறையில் இடித்து 6 மாதங்களுக்குள் பாலப்பணியானது முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் 19-08-2019 அன்று பாலமானது இடிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டது. ஆனால் எந்த வித பணிகளும் நடைபெறாமல் பாலப்பணியானது கிடப்பில் போடப்பட்டு வந்தது. இந்நிலையில் 17-08-2022 அன்று பொதுமக்களை திரட்டி ஆரல்வாய்மொழி சந்திப்பில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மேலும் இப்பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இப்பகுதியில் இயங்கி வருகின்ற சுமார் 1000-க்கும் மேற்பட்ட காற்றாலை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற தொழிலாளர்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது. மேலும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் பால பணியினை விரைந்து முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆரல்வாய்மொழி – குமாரபுரம் இணைப்புச் சாலையின் குறுக்கே செல்கின்ற சுபாஷ்நகர் ரெயில்வே மேம்பால பணியானது நடைபெற்று வருகின்றது. இப்பணியினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் நேரில் பார்வையிட்டு, சென்னை ரெயில்வே கோட்ட உதவி பொதுமேலாளர் தாஸ் மற்றும் ஒப்பந்ததாரர் பொன்னுசாமி ஆகியோரிடம் கூறுகையில், இப்பணிகள் மிக இன்றியமையான பணியாகும். இப்பணியின் முக்கியத்துவத்தை கருதி மேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து முடித்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட வேண்டுமென வலியுறுத்தினார். விரைவில் இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
உடன் ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவரும், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான சி.முத்துக்குமார், கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் நரசிங்கமூர்த்தி, கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், மாவட்ட மாணவரணி செயலாளர் மனோகரன் உட்பட பலர் இருந்தனர்.