புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது;-
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வட்டம் அமைந்துள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தென்னகத்து பதுவை, கோடி அற்புதர் என அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இறுதியில் தொடங்கும். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை மறைவட்ட அதிபர் அருட்தந்தை அந்தோணி வியாகப்பன் தலைமையில் கொடி மந்திரிக்கப்பட்டு பின்னர் பவனியாக கொண்டு வரப்பட்டு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நற்கருனை ஆசீர் நடக்கிறது. திருவிழா சிறப்பு நிகழ்வாக வருகிற 10ம் தேதி மாலையில் திருப்பலியும், புனித அந்தோணியார் உருவம் தாங்கிய சப்பர பவனியும் நடக்கிறது. 11ம் தேதி காலை 4.30 மணி முதல் திருப்பலி, 11.30 மணிக்கு பெருவிழா திருப்பலி பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி பங்கேற்று ஆண்டு பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுகிறார். விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும் பங்குத்தந்தை மோட்சராஜன், உதவி பங்குத்தந்தை மிக்கேல் சாமி, ஆன்மிகத்தந்தையர்கள் சகாயதாசன், பீட்டர் பிச்சைக்கண் மற்றும் புளியம்பட்டி பங்கு இறைமக்கள் செய்துள்ளனர். திருவிழாவில் தமிழகம் மற்றும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.