சிவகங்கை:ஜன:07
சிவகங்கை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 2025-ஐ, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் வெளியிட்டு தெரிவிக்கையில்
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி மையம் விரிவுபடுத்துதல் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களின் ஆலோசனை மற்றும் பொதுமக்களின் ஆலோசனை பெற்று அதனடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 01.01.2025 ம் தேதியினை தகுதி ஏற்படுத்தல் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025 தொடர்பான பணிகள் கடந்த 29.10.2024 முதல் 28.11.2024 முதல் நடைபெற்றது.
அந்தவகையில் சிவகங்கை மாவட்டத்தில் 1364 வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு பின் மாற்றி அமைக்கப்பட்டு கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு சுருக்கத் திருத்தம், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி சிவகங்கை மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,88,036 ஆண் வாக்காளர்களும், 6,10,159 பெண் வாக்காளர்களும், 60 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் என ஆக மொத்தம் 11,98,255 வாக்காளர்கள் இருந்தனர்.
மேலும், 29.10.2024 முதல் 28.11.2024 வரை மொத்தம் 37,072 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 36,361 மனுக்கள் அனுமதிக்கப்பட்டு 711 மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டது. 29.10.2024 முதல் 28.11.2024 வரை தொடர் திருத்தத்தில் 9,792 ஆண் வாக்காளர்களும், 12,803 பெண் வாக்காளர்களும், 04 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் ஆக மொத்தம் 22,599 வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன
இத்திருத்தத்தின் போது 2,567 ஆண் வாக்காளர்களும் 3,289 பெண் வாக்காளர்களும் மற்றும் 01 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் என ஆக மொத்தம் 5,857 வாக்காளர்கள் பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 184-காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 1,57,432 ஆண் வாக்காளர்களும், 1,63,582 பெண் வாக்காளர்களும், 54 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 3,21,068 வாக்காளர்களும், 185-திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,48,104 ஆண் வாக்காளர்களும், 1,54,958 பெண் வாக்காளர்களும், 03 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 3,03,065 வாக்காளர்களும், 186-சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் 1,49,418 ஆண் வாக்காளர்களும், 1,55,423 பெண் வாக்காளர்களும், 02 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 3,04,843 வாக்காளர்களும், 187-மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் 1,40,307ஆண் வாக்காளர்களும், 1,45,710 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 2,86,021 வாக்காளர்களும் என மொத்தம் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து 5,95,261 ஆண் வாக்காளர்களும், 6,19,673 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என ஆக மொத்தம் 12,14,997 வாக்காளர்கள் உள்ளனர்.
அவ்வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் இன்றைய தினம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) (பொ) மற்றும் ரமேஷ், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், துணை வட்டாட்சியர் (தேர்தல்), அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.