பசும்பொன்னில் தேசியத் தலைவர் திருமகனார் முத்துராமலிங்க தேவர் மண்டபத்தில் ரூ.1.55 கோடி மதிப்பேட்டில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டடம்
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ராமநாதபுரம், அக்.11-
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேசியத் தலைவர் தேவர் திருமகனார் முத்துராமலிங்க தேவர் மண்டபத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுமக்கள் காத்திருப்போர் கூடத்தை பால்வளத் துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் முன்னிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேவர் திருமகனார் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் மிக முக்கியமான ஒருவராக திகழ்ந்தவர் ஆவார். அதுமட்டுமின்றி இப்பகுதியில் வளர்ச்சிக்கு பாடுபட்டு பொதுமக்களின் மனதில் தெய்வீக திருமகனாராக போற்றக்கூடிய சிறந்த தலைவராக உள்ளார். அத்தகைய தேசியத் தலைவருக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 2007 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது தேவர் திருமகனார் நூற்றாண்டு விழா நடைபெற்றது ஒட்டி அவருக்கு மணி மண்டபமும் மற்றும் அவர் வாழ்ந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பித்து தந்தவர் கலைஞர் அவர்கள் தான். அதுமட்டுமின்றி தேவர் திருமகனார் பெயரில் கமுதி திருநெல்வேலி உசிலம்பட்டி போன்ற இடங்களில் கல்லூரிகள் கட்டப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும் தென்னகத்தில் தேசியத் தலைவர்களுக்கு சிலை வைக்கப்பட்டு வந்த நிலையில் முதன் முதலாக மதுரையில் மாபெரும் சிலை வைத்து இந்திய திருநாட்டின் தலைவரை வைத்து சிறக்க
வைத்ததும் கலைஞர் அவர்கள் தான். அதேபோல் ஆண்டுதோறும் தேவர் திருமகனார் நினைவு நாள் பிறந்தநாள் ஜெயந்தி விழாவையொட்டி ஆட்சி இருக்கும் போதும் சரி இதுக்கு முன்னரும் சரி பசும்பொன் நினைவு இடத்திற்கு வருகை தந்து தேவர் திருமகனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வந்தார்கள். அதேபோல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் வருகை தந்து மரியாதை செலுத்தி செல்கிறார்கள் தற்போது இப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க விழா காலத்தில் அதிக அளவு பொதுமக்கள் வருகை தந்து வணங்கி செல்வதை ஒட்டி அவர்கள் தங்கி செல்வதற்கு ஏதுவாக ரூ.1.55 கோடி மதிப்பில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி ஆகியவை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டுமான பணிகள் நடைபெற்று, வரும் 30ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு தேவர் திருமகனார் ஜெயந்தி விழாவில் பயன்பாட்டிற்கு பயன்படுத்த உள்ளன.
காத்திருப்போர் கூடத்தில் சுமார் 1000 பேர் தங்கி சென்றிடவும் மேலும் ஆண்கள் பகுதி பெண்கள் பகுதி மாற்றத்திறனாளிகள் என தனித்தனியே பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக சென்றிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பகுதியில் தேவையான திட்டங்கள் மற்றும் வசதிகள் விரிவுபடுத்தி தரப்படும்.
இவ்வாறு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக தேவர் திருமகனார் நினைவிடத்திற்கு பால் வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஆய்வின்போது அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ( இராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி, மதுரை மண்டல பொதுப்பணித்துறை பொறியாளர் செல்வராஜ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் குருதிவேல் மாறன், கமுதி யூனியன் சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் வைத்தியலிங்கம், அருணகிரி, ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.