திருப்பத்தூர்:மார்ச்:12, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவ்வாத்தூர் புதூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் நியாயவிலை கடைக்கு செல்ல தொடர்வண்டி பாதையை கடந்து இரண்டு கிலோமீட்டர் வரை செல்ல வேண்டி உள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பவர்களில் பெரும்பான்மையாக வயதானவர்கள் , மூத்தவர்கள் இருந்து வரும் நிலையில் ரயில்வே பாதையினை ஆபத்தை உணராமல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய அரிசி மற்றும் இதர பொருட்களை சுமந்து கொண்டு ரயில்வே தண்டவாளத்தை கடந்து வரும்பொழுது அதிக நேரமும் ஆபத்தும் நேரலாம் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் குறிப்பாக பட்டியலின சமூக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் ஆதலால் பகுதிநேர நியாய விலை கடையை அமைத்து தர வேண்டுமென சமூக ஆர்வலர் மூர்த்தி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுவினை சம்பந்தப்பட்ட துறைக்கு கொடுத்துள்ளனர். எனினும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். விரைவில் அப்பகுதிக்கு பகுதி நேர நியாய விலைக் கடை அமையுமா? என பலரும் எதிர்பார்க்கின்றனர்.