நாகர்கோவில் மே 31
குமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் அருகே சிறிய அளவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சினேகம் பெற்றோர் இல்லம் உரிமையாளரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.
நாகர்கோவில் வடசேரியை அடுத்த வெட்டுர்னி மடம் அருகே உள்ள வாடகை ஆட்டோ நிறுத்தத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் சுற்றி திரிந்தும், அருகில் கிடக்கும் குப்பைகளை எடுத்து தன்னருகில் வைத்து கொண்டிருப்பதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் வெங்கட் என்பவர் சினேகம் பெற்றோர் இல்ல உரிமையாளர் லதா கலைவாணனை தொடர்பு கொண்டு தகவல் அளித்தார்.
அவர் அளித்த தகவலின் படி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லதா கலைவாணன் மற்றும் சினேகம் பெற்றோர் இல்ல ஊழியர்கள் அப் பெண்ணை மீட்டு அவரை விசாரித்த போது அந்தப் பெண் சிறிய அளவில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. தொடர்ந்து அப் பெண்ணிடம் கேட்டபோது அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், தனது மாமியார் தன்னை அழைத்து வந்து இங்கே இறக்கி விட்டு விட்டு வருவதாக கூறி சென்றதாக தெரிவித்தார். எனவே மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை அப்படியே விட்டு விடாமல் மீட்டு நாகர்கோவில் மாநகராட்சியால் ஆதரவற்றோருக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொண்டு வந்து உணவளித்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கும் முயற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டு ஒரு பெண் சாலை ஓரம் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த சினேகம் பெற்றோர் இல்ல நிறுவன தலைவர் சமூக ஆர்வலர் லதா கலைவாணனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்