ராமநாதபுரம், மார்ச் 13-
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின்
முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் பதிவறை எழுத்தாளர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்த அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக 3 கட்ட போராட்டம் நடத்த மாநில மையத்தால் முடிவு செய்யப்பட்டது.
அதில் முதல் கட்டமாக அனைத்து ஊராட்சி செயலாளர் ஒரு நாள் மாநில அளவில் தற்செயல் விடுப்பு எடுப்பது மற்றும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வைத்து கண்டன உரை ஆற்றினார்.
செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் சிவசாமி, ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் முத்துமாரி, ஊராட்சி செயலாளர் சங்க இணைச் செயலாளர் ஜெய பரதன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் செந்தாமரை, மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி
இரண்டாம் கட்ட போராட்டமாக ஏப்ரல் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து ஊராட்சி செயலாளர்கள் சென்னை ஊரக வளர்ச்சி ஆணையரகத்தில் பெருந்திரள் முறையீடு செய்வது மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 21ம் தேதி திங்கட்கிழமை முதல் சென்னை ஊரக வளர்ச்சித் துறை ஆணையரகத்தின்முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது ஆகிய போராட்டங்களில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்களும் போராட்டங்களில் கலந்து கொண்டு கோரிக்கையை வெற்றியடைய செய்ய வலியுறுத்தி மாவட்ட தலைவர் முருகன் பேசினார்.